சேதுபதி (2016) – திரை விமர்சனம்

மதுரையில் துடிப்புமிக்க போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் விஜய் சேதுபதி, மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் கன்ட்ரோலில் இருக்கும் ஏரியாவில் பக்கத்து ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

இந்த வழக்கை விஜய் சேதுபதி விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வரும் வேலா ராமமூர்த்தி என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது. மேலும் வேறொரு எஸ்.ஐ.யை கொலை செய்வதற்கு பதிலாக, தவறுதலாக இந்த எஸ்.ஐ.யை கொலை செய்திருக்கிறார்கள் என்பதையும் கண்டறிகிறார்.

ஊரே வேலா ராமமூர்த்தியை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கிறார் வேலா ராமமூர்த்தி.

இந்த சூழ்நிலையில், செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர். அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதனால் விஜய் சேதுபதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

இறுதியில், தன்னை சிக்க வைத்த சதி திட்டத்திற்கு யார் காரணம் என்பதை விஜய் சேதுபதி கண்டு பிடித்தாரா? வேலா ராமமூர்த்தியின் பழிவாங்கும் திட்டம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

இதுவரை நகைச்சுவையான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, முதல் முறையாக மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறார். அன்பான கணவனாகவும், பொறுப்பான அப்பாவாகவும் மனதில் பதிகிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நாயகி ரம்யா நம்பீசன். மற்ற கதாநாயகிகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை துணிச்சலுடன் ஏற்று யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘பீட்சா’ படத்தில் இடம் பெற்றது போல, விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இருவரின் கெமிஸ்ட்ரி இப்படத்திலும் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

விஜய்சேதுபதி-ரம்யா நம்பீசன் தம்பதிக்கு குழந்தைகளாக நடித்திருப்பவர்கள் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வில்லனாக வரும் வேலா ராமமூர்த்தி மென்மையாக மிரட்டியிருக்கிறார். அதேசமயம், அதிகம் பேசப்படும் அளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார்.

விஜய்சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ படத்தை இயக்கியிருக்கிறார். சேதுபதி என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் விஜய் சேதுபதிக்கு பொருந்துமளவிற்கு செய்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பெரும் பலம். அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிப்படுத்தியிருப்பது இயக்குனரின் சிறப்பு. குறிப்பாக விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லனின் அடியாட்களை போனிலேயே மிரட்டும் காட்சி தியேட்டரையே அதிர வைத்திருக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் நன்றாக அமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளன.

மொத்தத்தில் ‘சேதுபதி’ கம்பீரம்.