மிருதன் (2016) – திரை விமர்சனம்

நடிகர் : ஜெயம் ரவி
நடிகை :லட்சுமி மேனன்
இயக்குனர் :சக்தி சௌந்தர்ராஜன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :வெங்கடேஷ்
ஊட்டியில் டிராபிக் எஸ்.ஐ. ஆக இருக்கும் ஜெயம் ரவி, தங்கை அனிகாவுடன் வாழ்ந்து வருகிறார். தங்கைக்காக எதையும் தியாகம் செய்யக்கூடியரான ஜெயம் ரவி, ஒரு விபத்தில் டாக்டரான லட்சுமிமேனனை சந்திக்கிறார். இருவரும் அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு விடுகிறார்கள்.

இந்நிலையில், தொழிற்சாலையில் இருந்து கெமிக்கல் ஏற்றிச் செல்லும் ஒரு லாரியிலிருந்து கெமிக்கல் வெளியே கொட்டிவிடுகிறது. இந்த கெமிக்கலை ஒரு நாய் ஒன்று குடிக்க, அதனால், அந்த நாய் வெறி பிடித்து ஒரு மனிதரை கடித்து விடுகிறது.

கடிப்பட்ட மனிதனின் உடலுக்குள் பரவிய அந்த வைரஸ், அவருக்குள் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்த அவர் மற்றவர்களை கடிக்க ஆரம்பிக்கிறார். இதனால் அந்த வைரஸ் ஊர் முழுக்க பரவுகிறது.

நிலைமை தீவிரம் அடைய, போலீஸ் அந்த ஊருக்குள் யாரும் வரக்கூடாது என்றும், ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கிறது. மேலும் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ளவும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண லட்சுமி மேனன் அடங்கிய ஒரு மருத்துவக்குழு ஜெயம் ரவியின் உதவியுடன், கோவையில் இருக்கும் மருத்துவமனையில் வைரஸை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிக்க செல்கின்றனர். ஆனால், இவர்களை வைரஸ் தாக்கப்பட்ட மனிதர்கள் செல்லவிடாமல் தடுக்கிறார்கள்.

இறுதியில், வைரஸ் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து ஜெயம் ரவி, லட்சுமி மேனன் தப்பித்தார்களா? வைரஸை அழிக்க மருத்து கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜெயம் ரவி, டிராபிக் எஸ்.ஐ.யாகவும், பாசமிகு அண்ணனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். படத்தின் முழு பொறுப்பையும் தன்மேல் ஏற்று நடித்திருக்கிறார். இவரை சுற்றியே படம் நகர்வதால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்காக தன்னால் முடிந்த அளவு கடின உழைப்பையும் கொடுத்திருக்கிறார். இந்த படம் இந்த வருடத்தில் இவருக்கு முதல் வெற்றியை தேடிக் கொடுக்கும் என நம்பலாம்.

கதாநாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனனுக்கு, ஜெயம் ரவியுடன் டூயட் பாட வாய்ப்பில்லை. டாக்டர் கதாபாத்திரத்தில் டாக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஜெயம் ரவியின் நண்பரான காளி, தங்கை அனிகா ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஆங்கிலப் படத்துக்கு இணையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். இவருடைய துணிச்சலுக்கு பெரிய பாராட்டுக்கள். புதுமையான திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம் என ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஆனால், நிறைய காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருப்பது படத்திற்கு சற்று பின்னடைவு.

படத்திற்கு பெரிய பலம் டி.இமானின் இசை. பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இரண்டிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மிருதன்’ மிரட்டுகிறான்.