போக்கிரி ராஜா (2016) – திரை விமர்சனம்

நடிகர் : ஜீவா
நடிகை :ஹன்சிகா
இயக்குனர் :ராம்பிரகாஷ் ராயப்பா
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :ஆஞ்சநேயன்
ஜீவாவுக்கு அடிக்கடி கொட்டாவி விடும் பழக்கம் இருக்கிறது. இதனால், இவரது வேலையும், காதலும் கைவிட்டு போகிறது. இந்நிலையில், ஒருநாள் ஹன்சிகாவை பார்க்கும் ஜீவா, அவள் மீது ஈர்ப்பு கொள்கிறார்.

அந்த நேரத்தில் ஹன்சிகாவின் ஹேண்ட் பேக்கை ஒருவன் திருடிச் செல்ல, அதை பறித்து பார்க்கும்போது, சிகரெட், மது பாட்டில் எல்லாம் இருப்பதை பார்க்கும் ஜீவா, ஹன்சிகா மீது தவறான அபிப்ராயம் கொள்கிறார்.

அதன்பிறகு, ஹன்சிகா வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே ஜீவாவுக்கு வேலை கிடைக்கிறது. அங்கேயும் இவரது கொட்டாவி பழக்கம் தொடர, அங்கேயும் அவருக்கு வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகிறது.

இந்நிலையில், ஐடி கம்பெனியில் பணிபுரிவது மட்டுமின்றி சமூக சேவையும் செய்துவரும் ஹன்சிகா மற்றும் அவரது குழுவுடன் ஜீவாவும் வெளியூர் செல்கிறார். அப்போது, அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியான சிபிராஜ், பொது இடத்தில் சிறுநீர் கழித்தார் என்பதற்காக அவர் மீது தண்ணீர் பாய்ச்சி, அவமானப்படுத்தி விடுகிறார் ஜீவா.

பின்னர் சிபியை ஜெயிலுக்கும் அனுப்பி விடுகிறார். அவமானத்தை தாங்க முடியாத சிபிராஜ், இதற்கு காரணமான ஜீவாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், சமூக சேவைகளில் ஈடுபடும் ஹன்சிகா மீதிருந்த தவறான அபிப்ராயம் காதலாக மாறுகிறது.

இறுதியில், இருவரும் காதலித்தார்களா? சிபிராஜ் ஜீவாவை பழி தீர்த்தாரா? ஜீவாவின் கொட்டாவி பழக்கம் அவருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டு வந்தது? என்பதே மீதிக்கதை.

ஜீவா இந்த படத்தில் மிகவும் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இவருடைய ஒவ்வொரு முகபாவனையும் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதென்றால் ஜீவாவுக்கு சொல்லித்தர தேவையில்லை. அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.

இப்படத்தில் வரும் ‘பப்ளி பப்ளி’ பாடலுக்கு ஏற்றார்போல், படம் முழுக்க மிகவும் பப்ளியாக வந்துபோகிறார் ஹன்சிகா. இவருடைய நடிப்பும் ஓகே ரகம்தான்.

சிபிராஜ் வித்தியாசமான வில்லனாக வந்து கலக்கியிருக்கிறார். இவருடைய நடிப்பு ஒவ்வொன்றும் இவரது அப்பா சத்யராஜை நினைவுபடுத்துகிறது. மேலும், ஜீவாவின் நண்பராக வரும் யோகி பாபு வரும் காட்சிகளும் கலகலக்க வைக்கிறது. மனோபாலா, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, ராம்தாஸ் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கொட்டாவியை வைத்து இந்த படத்தில் ஒரு புது மெசேஜை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. தனது முந்தைய படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்தற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை காமெடியுடன் ரசிக்கும்படி நகர்வது சிறப்பு.

டி.இமானின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக ‘பப்ளி பப்ளி’ பாடல் பார்க்கும்போது ஒவ்வொரு நடன அசைவுகளும் மிகவும் ரசிக்க வைக்கிறது. ஆஞ்சநேயனின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘போக்கிரி ராஜா’ காமெடி கிங்.