பிச்சைக்காரன் (2016) – திரை விமர்சனம்

நடிகர் : விஜய் ஆண்டனிநடிகை : சாத்னா டைடஸ்இயக்குனர் : சசிஇசை : விஜய் ஆண்டனிஓளிப்பதிவு : பிரசன்ன குமார்
பெரிய தொழிலதிபரின் மகன் விஜய் ஆண்டனி. அப்பா இல்லாத இவர் அம்மாதான் தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து வருகிறார். இதுவரை தொழில்கள் அனைத்தையும் கவனித்து வந்த இவரின் அம்மா, வெளிநாட்டில் இருந்து வரும் விஜய் ஆண்டனியிடம் அனைத்தையும் ஒப்படைக்கிறார்.

இதன்பின் எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி அம்மாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்படுகிறது. இதனால் விஜய் ஆண்டனியின் அம்மா கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என்று பல முயற்சிகளில் சிகிச்சை அளிக்கிறார். ஆனால், ஏதும் பலனளிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் ஒரு சாமியார், உன் அம்மா இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் 48 நாட்களுக்கு பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்று கூறுகிறார். இதையேற்று பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்கிறார்.

அதன்பின் விஜய் ஆண்டனிக்கு பல இன்னல்கள் வருகிறது. ஒருபக்கம் விஜய் ஆண்டனியின் உறவினர் அவரின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். இதையெல்லாம் சமாளித்து அம்மாவிற்காக வேண்டிய வேண்டுதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் ஆண்டனி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் அம்மாவிற்காக ஏங்கும் மகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக சாத்னா டைடஸ் விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரன் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார், சந்தோஷமாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் என்று தெரிந்து அவரை விட்டு விலக நினைத்தாலும், காதலால் அவருடனே பயணிப்பது என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

வித்தியாசமான கதை கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சசி. பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை அப்படியே படம் பிடித்து காண்பித்திருக்கிறார். பிச்சைக்காரர்களின் உலகத்தில் சோகம் மட்டுமில்லை, சந்தோஷமும் இருக்கிறது என்பதை காட்டியதற்கு பெரிய கைதட்டல். படத்தின் பெரிய பலம் வசனம். விஜய் ஆண்டனியிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கிறார்.

பிரசன்ன குமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் எளிய உலகை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பிச்சைக்காரன் தீம் இசையும், நூறு சாமிகள் பாடலும் ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘பிச்சைக்காரன்’ செழிப்பான்.