கெத்து படத்தில் ஸ்டைலான வில்லனாக நடிக்கும் விக்ராந்த்

கெத்து படத்தில் ஸ்டைலான வில்லனாக நடிக்கும் விக்ராந்த்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பாண்டிய நாடு’ படம் விக்ராந்துக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற்றுக் கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து சஞ்சீவ், இயக்கத்தில் ‘தாக்க தாக்க’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கெத்து’ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.

‘கெத்து’ படத்தில் விக்ராந்த் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்ராந்த் கூறும்போது, நான் சிசிஎல் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உதயநிதியிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. அவர் நடிக்கும் அடுத்த படத்தில் பவர்புல்லான நெகட்டிவ் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அதில் நான் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்.

அந்த கதாபாத்திரம் டம்மியானது கிடையாது. கதைக்கு அந்த கதாபாத்திரம்தான் பலமாக இருகும். கதையை கேட்டுவிட்டு இதற்கு ஓகே சொன்னால் போதும் என்று கூறினார்.

நானும், கிரிக்கெட்டை முடித்துவிட்டு இயக்குனர் திருக்குமரனிடம் வந்து கதையை கேட்டேன். நான் நடிக்கும் கதாபாத்திரத்தை அவர் எனக்கு விளக்கி கூறினார். அவர் கூறிய கதாபாத்திரம் பிடித்திருந்தது. இது எல்லா படத்திலும் உள்ள வில்லன்கள் போன்று இருக்காது. இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் வில்லத்தனம் இருக்கும்.

இந்தியன் கடற்படையில் வெளியேற்றப்பட்ட அதிகாரியாக நான் நடிக்கிறேன் என்றும், அதற்காக எனது உடையும், தோற்றமும் ரொம்பவும் ஸ்டைலாக இருக்கவேண்டும் என்று கூறினார். இது எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்ற யோசனையில் முதலில் தயக்கமாக இருந்தது.

இருப்பினும், கதை பிடித்திருந்தால் இதற்கு ஒத்துக்கொண்டேன். எனக்கு ஒரு மொக்கானிக் கதாபாத்திரம் கொடுத்திருந்தால், எவ்வித தயக்கமும் இல்லாமல் ஒத்துக்கொண்டிருப்பேன். ஆனால், திருக்குமரன் இந்த கதாபாத்திரம் உங்களுக்கு சரியாக இருக்கும் என்று கூறியதால் இதில் தயக்கமில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

‘கெத்து’ படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் 20-25 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் மேகாலயாவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என தெரிகிறது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.