வேதாளம் – திரை விமர்சனம்

நடிகர் : அஜித்குமார்
நடிகை :ஸ்ருதிஹாசன்
இயக்குனர் :சிவா
இசை :அனிருத் ரவிச்சந்திரன்
ஓளிப்பதிவு :வெற்றி
சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.

வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

பாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.

கொலைகார குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.

லட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார்? எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

வீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார்.  இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா….’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல்.