தூங்காவனம் – திரை விமர்சனம்

நடிகர் : கமல்ஹாசன்
நடிகை :திரிஷா
இயக்குனர் :ராஜேஷ்
இசை :ஜிப்ரான்
ஓளிப்பதிவு :சனு ஜான்

போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜ்ஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை திருடுகிறார். அதை பதுக்கி வைக்கும் போது மற்றொரு போலீசான திரிஷா பார்த்து விடுகிறார்.

போதைப் பொருளை திருடியதால் கமலின் மகனை பிரகாஷ் கடத்துகிறார். அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவர் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என இரண்டு சென்டிமென்ட் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஆக்‌ஷன் கதைகளில் நடித்திருக்கிறார் கமல். வழக்கமான நேர்மை போலீஸ் போல் இல்லாமல் வித்தியாசமான போலீசாக நடித்திருக்கிறார். கமலின் நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை. நடிப்பில் என்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவிற்கு நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் இப்படம் முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

படத்திற்கு பலமாக பிரகாஷ் ராஜ்ஜின் நடிப்பு அமைந்திருக்கிறது. இவருடைய காட்சிகள் அனைத்திலும் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார். கமலை ஆட்டி வைக்கும் காட்சிகளில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு போலீசாக வரும் கிஷோர் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சம்பத், ஜெகன், ஆஷா சரத் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம். படம் முடியும் போது இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்துவிட்டதாக, என்றளவிற்கு இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆக்‌ஷன் படத்தை மிகவும் ஸ்டைலீஷாக கொடுத்திருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் படத்தில் ஒரு பாடல்தான். வழக்கமான படத்தில் இடம் பெறும் பாடல் போல் இல்லாமல் உருவாக்கியிருப்பது சிறப்பு. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சனு ஜானின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக கமல், திரிஷா, கிஷோர் மோதும் சண்டைக்காட்சி சிறப்பு.

மொத்தத்தில் ‘தூங்காவனம்’ ரசிகர்களை தூங்க விடவில்லை.