நடிகர் சங்கத்தை காணோம் என்று கூறியதால் நடிகர் வடிவேலு மீது வழக்குப்பதிவு

நடிகர் சங்கத்தை காணோம் என்று கூறியதால் நடிகர் வடிவேலு மீது வழக்குப்பதிவு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக, நடிகர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

நடிகர் விஷால் அணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி மதுரைக்கு சென்ற அவர், அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் எனது படம் ஒன்றில் கிணற்றை காணோம் என்ற காமெடி உள்ளது. அதேபோல் நடிகர் சங்கத்தை காணோம் என கூறியதாக தெரிகிறது.

அத்துடன் நாங்கள் பதவிக்கு வந்தபின் காணாமல் போன கிணற்றை போல, காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம் எனவும் கூறியதாக தெரிகிறது. இந்த கருத்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக நடிகர் சரத்குமார் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ஆட்டோராஜா, வக்கீல் அய்யாவு மூலம் நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மன உளைச்சல் ஏற்படுத்திய நடிகர் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு மோகனம்பாள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வருகிற நவம்பர் மாதம் 20-ந்தேதி நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டார்.