சரத்குமார் – விஷால் அணியினர் வீடு வீடாக ஓட்டுசேகரிப்பு

சரத்குமார் - விஷால் அணியினர் வீடு வீடாக ஓட்டுசேகரிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. இரு தரப்பிலும் 58 பேர் போட்டியிடுகிறார்கள். சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் நிற்கின்றனர். நடிகர்-நடிகைகளிடம் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதியுள்ள வாக்காளர்கள் 3,139 பேர். இவர்களில் 1,175 பேர் வெளியூர்களில் வசிக்கும் நாடக நடிகர்-நடிகைகள். இவர்களிடம் இரண்டு அணியினரும் நேரில் சென்று வாக்கு கேட்டனர். தற்போது 934 பேர் தபாலில் தங்கள் ஓட்டுகளை அனுப்பி வைத்து விட்டனர். மீதி 241 பேர் நேரில் வாக்களிக்க வருகிறார்கள். சென்னையில் மட்டும் ஓட்டுப்போட தகுதியுள்ள முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் 1,900-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்களிடம் இரு அணியினரும் தற்போது ஆதரவு திரட்டி வருகிறார்கள். சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்ட நடிகை ஸ்ரீப்ரியா தலைமையில் நடிகைகள் வீடு வீடாக செல்கிறார்கள். நடிகர்களும் தனி குழுவாக சென்று ஓட்டு கேட்கிறார்கள். சரத்குமார் தனது அணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையை வாக்காளர்களிடம் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர்.

இதுபோல் விஷால் அணியை சேர்ந்த ரோகிணி, பிரசன்னா, நந்தா, ரமணா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர். அவர்களும் தேர்தல் அறிக்கை பிரதிகளை கொடுத்து ஆதரவு திரட்டுகிறார்கள். கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் போன்ற பகுதிகளில் நடிகர்-நடிகைகள் அதிகம் வசிக்கின்றனர். அந்த பகுதிகளில் இரு அணியினரும் முற்றுகையிட்டு ஓட்டு சேகரித்து வருகிறார்கள்