எலி – திரை விமர்சனம்

Eli1960களில் மெட்ராஸ் (தற்போது சென்னை) நகரில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் எலி.

சிகரெட் புகைப்பதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது. ஆனால், நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் வில்லன் பிரதீப் ராவத், சமூக விரோதமாக சிகரெட்டை இறக்குமதி செய்து அதை விற்று வருகிறார். இவரை கையும் களவுமாக பிடிக்க போலீஸ் போடும் திட்டங்கள் அனைத்தும் எப்படியோ லீக் ஆகிவிடுகின்றன.

பிரதீப்பின் கூட்டாளி ஒருவன் போலீசில் உளவாளியாக இருந்து கொண்டு தகவல்களை கூறி வருவதை அறிந்த போலீஸ், பதிலுக்கு பிரதீப்பின் கூட்டத்திலும் போலீஸ் உளவாளியை அனுப்ப திட்டமிடுகிறது.

இது ஒருபுறமிருக்க, போலீஸ் வேலையில் சேர முடியாத விரக்தியில் திருட்டுத்தனம் செய்து வரும் வடிவேலு, போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

ஒருநாள் இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கிறார். போலீசுக்கே தண்ணி காட்டிய இவன்தான் பிரதீப் ராவத் கூட்டத்தில் உளவாளியாக இருக்க சரியான ஆள் என்று கருதி வடிவேலுவை தேடிப்பிடிக்கின்றனர்.

ராவத்தை பிடிக்க உதவி செய்வதற்கு கைமாறாக வடிவேலு மீது உள்ள 650 கேஸ்களையும் பைசல் செய்துவிடுவதாகவும் கூடவே போலீஸ் வேலை தருவதாகவும் கூறி, அவரை ராவத் கூட்டத்தில் சேர்த்து விடுகின்றனர்.

போலீஸ் போட்ட திட்டப்படி வடிவேலு தனது வேலையை செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

தெனாலிராமனில் விட்டதை எலியில் பிடித்து விடலாம் என்று நம்பி நடித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் இதிலும் சற்று ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

படம் தொடங்கும் போது வடிவேலுவை பார்த்தவுடன் வரும் சிரிப்பு, போகப்போக குறைகிறது. திரையில் தோன்றினாலே சிரிப்பதற்குத் தயாராக இருக்கும் ரசிகர்களை வடிவேலு இப்படத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாயகியாக நடித்திருக்கும் சதாவுக்கு வாய்ப்புகள் குறைவு. பாடல் காட்சிகள் உள்ளிட்ட ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.

வில்லனாக வரும் பிரதீப் ராவத் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தெனாலிராமன் படத்தில் தடுமாறிய இயக்குனர் யுவராஜ், எலி படத்திலும் தடுமாறியிருக்கிறார்.

நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவை வைத்துக் கொண்டு சரியாக கையாள தெரியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. படம் முழுவதும் காமெடி காட்சிகள் இருந்தாலும் அதில், சில காட்சிகளே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. குறிப்பாக இந்தி பாடலில் வடிவேலு-சதா ஜோடியின் டூயட் பாடல் சபாஷ் பெறுகிறது. பால் லிவிங்ஸ்டனின் கேமரா 1960களில் உள்ள சென்னையை அழகாக பதிவு செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘எலி’ சேட்டை கம்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *