அச்சாரம் – திரை விமர்சனம்

d5206403-313e-4372-9a68-fef6514ae078_S_secvpfநேர்மையான போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராமின் தாயான ரேகா, அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால், கணேஷோ அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். தாய் மீது அதிக பாசம் கொண்ட கணேஷ், ஒரு கட்டத்தில் ரேகாவின் உடல்நலம் கருதி திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.

அதன்படி, ரேகாவும் அவருக்கு பெண் தேடும் படலத்தை தொடங்குகிறார். அப்போது, தஞ்சாவூரில் இருக்கும் தனது உறவுப்பெண்ணான பூனம் கவுரை கணேஷுக்கு மணமுடிக்க முடிவு செய்கிறார். அவர்களது வீட்டுக்கு சென்று இதற்கு அச்சாரமும் போட்டுவிடுகிறார்.

இதனிடையே தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பூனம் கவுர், வீட்டில் குடும்பப் பெண்ணாகவும், வெளியில் மாடர்ன் பெண்ணாகவும் வலம் வருகிறார்.

அங்கு வேறொரு கம்பெனியில் வேலை பார்க்கும் சைமனும், பூனம் கவுரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இதனால், கணேஷ் உடனான திருமணத்தில் நாட்டமில்லாமல் இருக்கிறார் பூனம் கவுர்.

காதல் என்றாலே வெறுக்கும் அப்பாவிடம் தனது காதல் விஷயத்தையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், கல்யாண நாளன்று காதல் ஜோடிகள் ஊரை விட்டு ஓடிச்செல்கிறது.

தனது மகனின் திருமணம் நின்றுவிட்டதால் அவமானம் தாங்க முடியாத கணேஷின் அம்மா, கல்யாண மண்டபத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

தனது அம்மாவின் சாவுக்கு பூனம் கவுர்தான் காரணம் என்று முடிவு செய்யும் கணேஷ், அவரையும், சைமனையும் தேடிக் கண்டுபிடித்து கொல்ல முடிவு செய்கிறார். இறுதியில், அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கணேஷ் வெங்கட்ராம், போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் தோற்றமளிக்கிறார். காதல் காட்சிகளில் எல்லாம் இவரை ரசிக்க முடியாத அளவுக்கு இவருடைய உயரமே இவருக்கு பலவீனமாக உள்ளது. எனினும் சைக்கோ கில்லராக அழகாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு நடனமாடியிருக்கிறார்.

பூனம் கவுர், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். நடிப்புதான் இவருக்கு சுத்தமாக வரவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் நிறையவே தடுமாறியிருக்கிறார். கிளைமாக்சில் இவர் அழும்போது நமக்கு சிரிப்புதான் வருகிறது.

மற்றொரு ஹீரோவாக வரும் சைமன் அழகாக இருக்கிறார். காட்சிகளுக்கேற்ற வசனத்தை அதற்கேற்ற முகபாவனையுடன் பேச முடியாமல் தவித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் பரவாயில்லை ரகம்தான்.

பூனம் கவுரின் அப்பாவாக நடித்திருப்பவருக்கு வில்லனுக்கு ஏற்ற முகம். ரொம்பவும் எதார்த்தமாக, அலட்டிக்கொள்ளாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் கணேஷ் வெங்கட் ராமுக்கு அம்மாவாக வரும் ரேகாவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குனர் மோகன் கிருஷ்ணா, அழகான ஒரு கிரைம் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை பக்குவமாக கையாண்டிருக்கிறார். ஆனால், வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். திரைக்கதையை கையாண்ட விதமும் சரியில்லை.

ஸ்ரீகாந்த் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். பிரதாப் ஒளிப்பதிவு கொடைக்கானலை அழகாக படம்பிடித்திருக்கிறது.

பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும், அதற்கேற்றார்போல் ஒளியை அமைத்து கண்களுக்கு உறுத்தலை கொடுக்காமல் படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘அச்சாரம்’ தெளிவு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *