விஜய் பட தொடக்க விழாவில் ரஜினி

விஜய் பட தொடக்க விழாவில் ரஜினி?

விஜய் நடிப்பில் தற்போது ‘புலி’ படம் வேகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. விடுமுறையை கழிக்க லண்டன் சென்றிருக்கும் விஜய் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.

இந்நிலையில், அட்லி படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தொடக்க விழாவில் ரஜினி கலந்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவியுள்ளது.

விஜய் பட தொடக்கவிழாவில் ரஜினி கலந்துகொள்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு காரணம் தயாரிப்பாளர் தாணு தான் என்று தெரியவந்துள்ளது. அதாவது, அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். அதேபோல், ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுவே தயாரிக்கிறார்.

ரஜினி படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விஜய் படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள ரஜினியிடம் கலைப்புலி எஸ்.தாணு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ரஜினி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் தொடங்கவிருக்கும் விஜய் படத்தின் தொடக்கவிழாவில் ரஜினி கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘ராஜாராணி’ படத்தின் தொடக்கவிழாவில் கமல் நேரடியாக கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அதேபோல், தனது அடுத்த படத்தின் தொடக்கவிழாவில் ரஜினி கலந்துகொள்ளவிருக்கும் செய்தி அட்லிக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.