ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படமாகும். ஏற்கெனவே விஜய் கூட்டணியில் ‘தலைவா’ படத்தின் பாடல்களும், அட்லி கூட்டணியில் ‘ராஜா ராணி’ படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானதால் இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்திற்கு தீவிரமாக இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பாட வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக ஜி.வி.பிரகாஷ் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகியதாகவும், அவரும் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷின் 50-வது படம் என்பதால் இப்படத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரை பாட வைக்க இருப்பதாக ஜி.வி.பிரகாஷுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்காக கானா பாடலில் அனைவரையும் கவர்ந்த இசையமைப்பாளர் தேவாவை ஒரு பாடலுக்கு பாட வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.