பாபநாசம் – திரை விமர்சனம்

papanasam

Movie: [usr=3.5 size=20]

பாபநாசத்தில் கேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார் கமல். இவருடைய முழு பொழுதுபோக்கு படம் பார்ப்பது மட்டுமே. இதனால், அனைத்து மொழிகளும் இவருக்கு அத்துப்படி. படிப்பறிவு இல்லாதவர் என்றாலும், நிறைய சினிமா படங்களை பார்த்து தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இவருக்கு அழகான மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி கௌதமியுடனும், குழந்தைகள் நிவேதா தாமஸ், மற்றும் எஸ்தர் மீது பாசத்தை பொழிந்து வரும் கமல், பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கமலின் மூத்த மகளான நிவேதா தாமஸ், பள்ளியில் ஏற்பாடு செய்த சுற்றுலாவுக்கு செல்கிறாள். அந்த சுற்றுலாவில் ஒரு இளைஞன், நிவேதா தாமஸுக்கு தெரியாமல் அவளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு தனது ஆசைக்கு இணங்கும்படி அவளை மிரட்டுகிறான். அதன்படி நடக்காவிட்டால் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூறுகிறான்.

ஒருநாள் இரவு அவளது வீட்டுக்கு அந்த இளைஞன் வருகிறான். நிவேதா தாமஸிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு அவளை வற்புறுத்துகிறான். ஆனால், நிவேதா தாமஸோ இதில் துளியும் சம்மதமில்லாமல் அவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள்.

அப்போது, கௌதமி அங்கு வருகிறார். விஷயம் அறிந்ததும், அவளும் இளைஞனிடம் தன்னுடைய பெண்ணை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். அப்போது அந்த இளைஞன், உனது மகளை விட்டுவிடுகிறேன். அதற்கு பதிலாக, நீ எனது ஆசைக்கு இணங்கு என்று கௌதமியிடம் கூறுகிறான்.

தனது அம்மாவை இழிவுபடுத்தியதால் கோபமடைந்த நிவேதா தாமஸ், அவனை ஒரு இரும்பு கம்பியால் தாக்க, அவன் அந்த இடத்திலேயே பிணமாகிறான். பின்பு, அவனுடைய பிணத்தை அந்த தோட்டத்திலேயே புதைக்கிறார்கள். அப்போது, கமலை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

மறுநாள் வீட்டுக்கு வரும் கமலிடம், இரவு நடந்த விஷயத்தை கூறுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அந்த கொலையை மறைப்பதற்கான முயற்சியில் களமிறங்குகிறார் கமல்.

அப்போது, இவர்கள் கொலை செய்தது ஐஜி, ஆஷா சரத்தின் மகன் என்பது கமலுக்கு தெரியவருகிறது. அப்போதுதான், இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என்பது கமல் குடும்பத்துக்கு புரிய ஆரம்பிக்கிறது.

தொலைந்துபோன தனது மகனை தேடும் முயற்சியில் ஆஷா, தனது போலீஸ் படையை களமிறக்குகிறார். அவர்கள் விசாரணையை பல கட்டங்களில் நடத்துகின்றனர். இறுதியில், இந்த பிரச்சினையில் இருந்து கமல் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கமல், படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவி முகத்துடனே வலம் வந்திருக்கிறார். அதேநேரத்தில், பாசமிகு அப்பாவாகவும், பொறுப்பான குடும்ப தலைவனாகவும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நெல்லை தமிழில் அழகாக பேசி நடித்திருக்கிறார்.

பிற்பாதியில், இவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். அதில் அழகாகவும், எதார்த்தமாகவும் நடித்து பாராட்டும்படி செய்திருக்கிறார் கமல்.

இவருடைய மனைவியாக வரும் கவுதமி, வயதில் முதிர்ச்சி இருந்தாலும், தோற்றத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார். நடுத்தர குடும்ப தலைவியாக அனைவர் மனதில் அழகாக பதிந்திருக்கிறார்.

கமல்-கவுதமியின் மகள்களாக வரும் நிவேதா தாமஸும், எஸ்தரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். இதில் எஸ்தர், சிறு குழந்தையாக இருந்தாலும் அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐஜியாக வரும் ஆஷா சரத், அந்த கதாபாத்திரத்திற்குண்டான மிடுக்குடன் வலம் வந்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் நிறைய கதாபாத்திரங்கள் ஒரு சில காட்சிகளே வந்தாலும், மனதை விட்டு அகலவில்லை.

அனைத்து மொழிகளிலும் வெற்றிகண்ட ‘திரிஷ்யம்’ படத்தை தமிழிலும் அதற்கேற்றார்போல் அழகாக இயக்கியிருக்கிறார் ஜீத்து ஜோசப். அளவான கதாபாத்திரங்களை அழகாக கையாண்டிருக்கிறார்.

முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்திருக்கிறார். திரைக்கதையின் வேகம், ரசிகர்களை தியேட்டரை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையும் மென்மையாகவே நகர்கிறது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமையை அழகாக படம்பிடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் தெளிவாக படமாக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.