பேபி – திரை விமர்சனம்

Baby-Movie-Posters-1Movie: [usr=3.0 size=20]

மனோஜ்-ஷிரா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.

இதனால் ஒரு குழந்தை மனோஜுடனும், மற்றொரு குழந்தை ஷிராவுடனும் வளர்ந்து வருகிறது. ஷிராவுடன் வளர்ந்து வரும் குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் கிடைக்கும் ஒரு பொம்மையை கண்டெடுக்கிறாள்.

எந்நேரமும் அந்த பொம்மையை வைத்துக்கொண்டே விளையாடி வருகிறாள். இரவிலும் தனிமையில் அமர்ந்து, அந்த பொம்மையுடனே விளையாடுகிறாள். அவளது குணாதிசயங்கள் ஷிராவுக்கு பயத்தை கொடுக்கவே, ஒரு மனோதத்துவ டாக்டரிடம் கொண்டு போய் குழந்தையை காட்டுகிறார்.

அவரோ குழந்தையிடம் விளையாட ஆள் இல்லாததால், அவளுடைய மனநிலையில் மாற்றம் இருக்கிறது. அவளிடம் யாராவது அதிக நேரம் செலவிட்டால் குழந்தை சரியான நிலைக்கு வந்துவிடும் என்று கூறுகிறார்.

இதையடுத்து ஒருநாள் வெளிநாட்டில் இருக்கும் தனது தோழியிடம், இண்டநெட்டில் வீடியோ சாட் செய்து கொண்டிருக்கிறார் ஷிரா. அப்போது, தன்னுடைய குழந்தையை அவளிடம் காட்டி அறிமுகப்படுத்துகிறாள்.

அவளது தோழியோ, இந்த குழந்தை உன்னுடைய சாயலும் இல்லை, மனோஜின் சாயலும் இல்லை. இது உன்னுடைய குழந்தைதானா? என்று ஒரு சந்தேகத்தை கிளப்புகிறாள். இது ஷிராவுக்குள்ளும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறாள். டிஎன்ஏ டெஸ்ட்டில் அந்த குழந்தை இவளுடையது இல்லை என்று ரிசல்ட் வருகிறது. இது, ஷிராவுக்கு வியப்பை தருகிறது. தனது கணவரிடம் இதுகுறித்து முறையிட்டு, சண்டையிடுகிறாள்.

இறுதியில், அந்த குழந்தை யாருடையது என்பது ஷிராவுக்கு தெரிந்ததா? குழந்தையும் சரியான நிலைக்கு வந்ததா? என்பதுதான் மீதிக்கதை.

ரொம்ப இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மனோஜ். இவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. நல்ல உள்ளம் படைத்த மனிதராகவும், பாசமிகு தந்தையாகவும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.

இவருக்கு மனைவியாக நடித்திருக்கும் ஷிரா, பார்க்க அழகாக இருக்கிறார். எந்த இடத்திலும் நடிப்பு என்பது தெரியாமல், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

படத்தில் இவர்களுடைய குழந்தைகளாக வரும் ஸ்ரீவர்ஷினி, சாதன்யா என்ற இரு குழந்தைகளும் ரொம்பவும் அழகாக நடித்திருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் யாரும் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அஞ்சலி ராவ், ஒரு சில காட்சிகளே வந்தாலும் மிரட்டுகிறார்.

இயக்குனர் சுரேஷ், குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு நல்ல கதையை தேர்வு செய்து, அழகாக படமாக்கியிருக்கிறார். ஒரு பேய் கதையில் செண்டிமெண்ட் கலந்து பார்ப்பவர்களுக்கு போரடிக்காமல் செய்திருக்கிறார்.

ஆனால், படத்தின் முடிவு எதிர்பார்க்காதது. அந்த முடிவு ரசிகர்களுக்கு திருப்தி தருமா? என்பது சந்தேகம்தான். இதை மட்டும் கொஞ்சம் மாற்றியிருந்தால், படம் ஒரு திருப்தியை கொடுக்கும் என நம்பலாம்.

சதீஷ், ஹரிஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பேய் கதைக்குண்டான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவும் மிரட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘பேபி’ மிரட்டுகிறாள்