பாகிஸ்தானின் கைக்கூலி ஷாருக்கான்: சாத்வி பிராச்சி பாய்ச்சல்

பாகிஸ்தானின் கைக்கூலி ஷாருக்கான்: சாத்வி பிராச்சி பாய்ச்சல்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 50-வது பிறந்த நாளை நேற்று மும்பையில் கொண்டாடினார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. தற்போது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது.

இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும் என கூறி இருந்தார்.

இந்நிலையில், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி, மேற்கண்டவாறு கூறியுள்ள ஷாருக்கானை பாகிஸ்தானின் கைக்கூலி (ஏஜெண்ட்) என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சகிப்புத்தன்மை தொடர்பாக வெளியிட்ட கருத்திற்காக, ஷாருக்கான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை ஷாருக்கான் திருப்பியளிக்க வேண்டும் என்றும் சாத்வி கூறியுள்ளார்.

ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகிய மூன்று கான்கள் நடித்த படங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று இதே சாத்வி பிராச்சி கூறியிருந்தது, நினைவிருக்கலாம்.