விருதுகளை திருப்பி அளிப்பதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை: கமல் ஹாசன் கருத்து

விருதுகளை திருப்பி அளிப்பதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை: கமல் ஹாசன் கருத்து
நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் தாக்குதல், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கொல்லப்படுவது மற்றும் மத சகிப்புத்தன்மைக்கு எதிரான போக்கு அதிகரித்து வருவது போன்றவற்றை கண்டித்து பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பல்துறை பிரபலங்கள் தங்களது சாகித்ய அகாடமி, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளித்து, தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வகையில், எதிர்ப்பு தெரிவிப்பதை சிலர் எதிர்த்தும், கண்டித்தும் வருகின்றனர். நாட்டின் உயர்ந்த விருதினைப் பெற்றவர்கள் என்ற அடையாளத்துடன் தங்களது எழுத்து அல்லது கலைத்துறையின் வாயிலாகவே தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என கண்டனக்குரல் எழுந்து வருகின்றது.

இந்நிலையில், ‘தூங்காவனம்’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ள நடிகர் கமல் ஹாசனிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல் கூறியதாவது:-

விருதுகளை திருப்பி அளிப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. உங்களுக்கு அந்த விருதினை வழங்கிய அரசையோ அதனை உங்கள் கையில் அன்புடன் தந்த நபரையோ அவமதிப்பதாக அது அமைந்துவிடும். மிகவும் திறமைவாய்ந்த அவர்கள் எழுதும் ஒரு கட்டுரை போதும். அதன்மூலம் அவர்கள் எதை எல்லாம் எதிர்த்து விருதுகளை திருப்பி அளிக்க நினைக்கிறார்களோ…, அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி, கவனத்தை ஈர்க்க முடியும்.

அவர்கள் இனிமேலும் கோபப்பட மாட்டார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை என்பது தந்துப் பெறுவது. தங்களது பங்காக இன்னும் சற்று சகிப்புத்தன்மையுடன் அவர்கள் இருக்க வேண்டும். நான் இதுதொடர்பாக, எந்தக் கட்சியையும் விமர்சிக்கவில்லை. எனினும், இந்தியாவுக்கு இது புதிதல்ல. இதற்கு முன்னர் நாம் பார்த்ததுபோல் இந்த கட்டத்தையும் இந்தியா சமாளித்து, கடந்துவிடும்.

1947-ம் ஆண்டில் இருந்தே சகிப்புத்தன்மையின்மை என்ற விவாதத்தை நாம் கையில் எடுத்து, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் இதுதொடர்பாக விவாதித்து வருகிறோம். அதனால்தான், நாம் இரண்டு நாடுகளாக இன்று பிரிந்து கிடக்கிறோம். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரியாமல் ஒரே நாடாக இருந்திருந்தால் மிகப் பிரமாதமான, பெரிய நாடாக வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விவகாரத்திலும் சீனாவைவிட நாம் முன்னேறி இருப்போம்.

இதே சகிப்புத்தன்மையின்மைதான் முன்னர் நமது நாட்டை கூறுபோட்டது. அதே சகிப்புத்தன்மையின்மை மீண்டும் ஒருமுறை நாட்டை கூறுபோட்டு விடக்கூடாது. நான் சகிப்புத்தன்மை அற்றவனல்ல. மதம்சாராத நாத்திகவாதியாக நான் இருந்தபோதிலும், எல்லா மதங்களையும், மதம்சார்ந்த பழக்கங்களையும் சகித்து கொள்வேன். எதற்கும் மறுப்பு தெரிவித்தது இல்லை. ஆனால், நான் மட்டும் அவற்றை பின்பற்ற மாட்டேன். அது என் உரிமை.

இவ்வாறு அவர் கூறினார்.

விருதுகளை திருப்பி அளிப்பதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், ‘எல்லாமே அரசியல்மயம்தான். எல்லாமே அரசியல்வாதிகள்தான். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னர் காந்தி, நேரு இருந்ததுபோல் உணர்வுப்பூர்வமான அரசியல் தலைவர்கள் நிறையபேர் இப்போதும் இருக்கிறார்கள் என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்.

எனது நாட்டை நான் நேசிக்கிறேன். நாட்டுக்கு எந்த கட்சி நல்லது செய்தாலும், அந்த கட்சிக்கு பயனுள்ளவனாக நான் இருப்பேன். அந்த அடிப்படையில்தான் நான் ஓட்டு போடுகிறேன். மனசாட்சியின் அடிப்படையில் ஓட்டளிப்பதை நாம் கடைபிடிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.