நானும் ரௌடிதான் படத்திற்கு யுஏ சான்று

விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற அக்டோபர் 21-ந் தேதி ஆயுத பூஜை தினத்தன்று இப்படம் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பதால், படத்திற்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும், இப்படத்தை ‘யுஏ’ சான்றிதழுடன் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா காது கேளாதவராக நடித்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆனந்த்ராஜ், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 475 திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து அக்டோபர் 21-ந் தேதி விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘டார்லிங்-2’ படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.