எனது கல்லீரல் 75 சதவீதம் பாதித்து விட்டது: அமிதாப் பச்சன்

எனது கல்லீரல் 75 சதவீதம் பாதித்து விட்டது: அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் மஞ்சள் காமாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

நான் ‘கூலி’ படத்தில் நடித்தபோது எனக்கு விபத்து ஏற்பட்டது. என் உயிரை காப்பாற்ற ரத்தம் தேவைப்பட்டது. அதற்காக சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டது. எனக்கு 60 பாட்டில்களுக்கும் அதிகமாக ரத்தம் ஏற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்.

ஆனால் எனக்கு ரத்தம் கொடுத்த யாரோ ஒருவருக்கு இருந்த மஞ்சள் காமாலை நோய் வைரஸ் எனது உடலில் புகுந்து என்னை தாக்கி இருக்கிறது. அதை நான் சரியாக கவனிக்கவில்லை. இதனால் எனது கல்லீரல் பாதிப்பு அடைந்தது. விபத்து நடந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனை செய்தபோதுதான் நோய் பாதிப்பு தெரியவந்தது.

12 சதவீத பாதிப்பு இருந்தபோதே அதை கண்டுபிடித்திருந்தால் நான் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டிருக்கலாம். ஆனால் கவனிக்காமல் காலம் கடந்து விட்டது. இதன் காரணமாக எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிப்பு அடைந்து இருக்கிறது. விழிப்புடன் இருந்திருந்தால் இந்த பாதிப்பு வந்திருக்காது.

தற்போது நான் 25 சதவீத செயல்பாட்டில் உள்ள கல்லீரலுடன் வாழும் சூழ்நிலையில் இருக்கிறேன். என்றாலும், நான் அதைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும் போலவே எனது செயல்களை செய்து வருகிறேன்.

இவ்வாறு அமிதாப்பச்சன் பேசினார்.