முறுக்கு மீசையுடன் வலம் வரும் கமல்

முறுக்கு மீசையுடன் வலம் வரும் கமல்

கமல் படத்துக்கு படம் புதுப்புது கெட்டப்பில் நடித்து வருகிறார். ‘தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களில் நடித்து அசத்தினார். புதிய படத்தில் கமல் எந்த கெட்டப்பில் வருகிறார் என்பதை அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடலை மாற்றிக் கொள்வது. வயதான பெரியவர், பெண், தாதா என்று விதவிதமாக மேக்கப் போட்டுக் கொள்ள மணிக்கணக்கில் மட்டுமல்ல, நாள் முழுவதையும் அவர் செலவிடுவார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘உத்தமவில்லன்’ படத்தில் மீசை இல்லாமல் நடித்த கமல், ‘பாபநாசம்’ படத்தில் நெல்லை மண் வாசனையை பிரதிபலிக்கும் வகையில் கெட்டப்பை மாற்றினார். அடுத்து ‘தூங்காவனம்’ படத்தில் கொஞ்சம் தாடி, முறுக்கிய சிறு மீசை என மாறினார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கமலுடன் திரிஷா நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘தூங்காவனம்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய கமல், ‘இனி எனது படங்கள் தொடர்ந்து வெளியாகும். அடுத்த படத்துக்கான வேலைகள் தொடங்கி விட்டது. படப்பிடிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டன’ என்று கூறினார்.

இப்போது கமலின் புதிய படத்துக்கான படப்பிடிப்பு ஓசையின்றி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. புதிய படத்துக்காக கமல் தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார். நீண்ட முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கிறார்.

‘தூங்காவனம்’ தெலுங்கில் ‘சிகட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் திரையிடப்படுகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் நீண்ட மீசையுடன் கமல் காட்சி அளித்தார்.