உலகத்திலேயே என் பெயரில்தான் அதிக போலி இணையதளங்கள்: இளையராஜா

உலகத்திலேயே என் பெயரில்தான் அதிக போலி இணையதளங்கள்: இளையராஜா

இனிய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. இவர் இசையமைத்த பாடல்களுக்கென தனிச்சிறப்பு உண்டு. தற்போது ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் 1000ஆவது படத்திற்கு இசையமைத்து வரும் இவர், உலகிலேயே தன்னுடைய பெயரில்தான் அதிக போலி இணையதளங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் இதற்காக இவர் தனியாக வெப்சைட் மற்றும் யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார்.

இது குறித்து இளையராஜா கூறும்போது, “இதுவரைக்கும் இணைய தளங்களில் என்னுடைய பெயரில் பல்வேறு வெப்சைட் பக்கங்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் என் கவனத்திற்கு வராமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்பட்டு வருகின்றன என்பதோடு, இந்த பக்கங்கள் மூலம் என்னுடைய ரசிகர்களை தவறாக திசை திருப்பும் வேலையிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கத்துடன் ஒரு இணைய பக்கத்தை இன்றிலிருந்து தொடங்கி இருக்கிறேன்.

இதன் மூலம் ரசிகர்கள் என்னுடன் இணைந்து பயணிக்கலாம். இந்த இணையதளத்தில் என்னைப்பற்றிய அபூர்வ புகைப்படங்களும், செய்திகளும் இடம் பெறும். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போட்டிகளும் புதிய படைப்பாளிக்கு சினிமாவில் தங்களுடைய பங்களிப்பை செலுத்தும் வகையிலான வாய்ப்பும் வழங்கப்படும்.

குறிப்பாக நான் தேர்வு செய்த ‘புத்தம் புது காலை’, ‘நின்னுக்கோரி வர்ணம்’ போன்ற இரண்டு பாடல்களும் இளம் படைப்பாளிகள் தங்களுடைய திறமையில் புதிதாக படப்பிடிப்பு நடத்துங்கள். இந்த படக்காட்சிகளை என் பார்வைக்கு வரும் வண்ணம் இணையத்தில் பதிவு செய்யுங்கள்.

பாடலுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்குமானால் அதனை நானே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசளிப்பேன். இதேபோல் நான் எடுத்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கவிதை எழுதலாம்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ரசிகர்கள் www.ilaiyaraajalive.com என்ற இணையத்திற்கு சென்று விபரங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அக்டோபர் 31ம் தேதிக்குள் உங்களுடைய படைப்புகளை இணையத்தில் பதிவு செய்து விடுங்கள்.

இதேபோல், யூடியூப் சேனல் www.youtube.com/ilaiyaraaja official வழியாக என்னுடைய அரிய வீடியோ இணைப்புகளை நீங்கள் காணலாம். இனிமேல் என் அதிகாரப்பூர்வமான சேனல்கள் இவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.