சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா

சிம்புவுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா

சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் நீண்ட நாட்களாக உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவும் காதல் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் காதலை வெறுத்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் இப்படம் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் இப்படத்தை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது.

ஒரு வழியாக இப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார். கடைசியாக இப்படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த பாடலை சென்னையில் செட் அமைத்து உருவாக்கி வருகிறார்கள்.

இந்த பாடலில் எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் போன்ற கெட்டப்பில் வருகிறார் சிம்பு. மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹன்சிகா சிம்புவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார். காதலில் பிரிந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து நடனமாடியிருப்பது படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. படத்தை எப்படியும் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முனைப்போடு படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.