அவெஞ்சர்ஸ் க்ரிம் – திரை விமர்சனம்| Avengers Grimm – Film Review

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைப்போடும் அவெஞ்சர்ஸ் க்ரிம் திரைப்படம் வித்தியாசமான, புதுமையான கதைக்களத்தை கொண்டுள்ளது.

கதைப் புத்தகங்களிலும் திரைப்படத்திலும் நாம் கண்டுகளித்த தேவதைகள் நிஜ உலகை கைப்பற்ற நினைக்கும் வில்லனிடமிருந்து எவ்வாறு மக்களை காப்பாற்றினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

அழகான ஆடைகள் அணிந்து மென்மையாக காட்சியளிக்கும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல், ரெட் ரைடிங் ஹூட் ஆகிய கதாப்பாத்திரங்கள் இந்த படத்தில் ஆக்ஷன் நாயகிகளாக மாறியுள்ளனர்.

மாயாஜால உலகில் இருந்து மந்திர கண்ணாடி வழியாக ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின் நிஜ உலகிற்கு வருகிறார். தனது பிரத்யேக மாயஜால சக்திகளைக் கொண்டு உலக மக்களை அடிமைப்படுத்த திட்டமிடுகிறார். ரம்பேல்ஸ் டில்ட்ஸ்கின்னின் சதியை முறியடிக்க அவரை பின்தொடர்ந்து வரும் ஸ்னோ வைட் தனது கணவரை கொன்றதற்காக அவரை பழிவாங்க துடிக்கிறாள்.

இந்நிலையில், ஸ்னோ வைட்டை மாயாஜால உலகத்தில் சந்திக்க வரும் சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் அவள் அங்கு இல்லாததை அறிந்து ஏமாற்றமடைகிறார்கள்.

ஸ்னோ வைட் தனது கணவன் கொலைக்கு காரணமாவர்களை பழி தீர்க்க நிஜ உலகத்திற்கு சென்றிருக்கிறார் என்று அறிந்ததும் இவர்கள் அனைவரும் நிஜ உலகத்திற்கு பயணிக்கிறார்கள்.

மாயாஜால உலகில் இருந்து புறப்பட்ட அனைவரும் நிஜ உலகில் ஸ்னோ வைட்டை சந்திக்கும்போது, வில்லனான ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள்.

தனது தந்திர சக்திகளை பயன்படுத்தி மாயாஜால உலகில் இருந்து படைகளை நிஜ உலகிற்கு கொண்டு வந்து உலக மக்களை தனது அடிமைகளாக மாற்ற ரம்பேல்ஸ்டில்ட்ஸ்கின் திட்டமிடுகிறான்.

இந்நிலையில் நிஜ உலகிற்கு வந்த சிண்ட்ரல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, ஸ்னோ வைட், ரப்பன்செல் மற்றும் ரெட் ரைடிங் ஹூட் ஆகியோர் தங்களின் மந்திர சக்திகளை உதவியோடு மக்களை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பது மீதி கதை.

ஜெரேமி எம்.இன்மன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதைக்களம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. அழகிய தேவதைகள் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சண்டையிடுவதை பார்க்க வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.

வில்லனாக நடித்திருக்கும் காஸ்பர் வான் டியன் தத்ரூபமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார். படத்தில் இடம்பெறும் பிற நடிகர்களைவிட இவரே நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகிகளை எடுத்துக்கொண்டால் ரெட் ரைடிங் ஹுட்டாக வரும் எலிசபெத் பீட்டர்சென் நன்றாக நடித்துள்ளார்.

பிற கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளனர். ஆனால் கதாநாயகிகளின் தோற்றத்தில் அதிக வித்தியாசம் இல்லாததால் கதாப்பாத்திரங்களின் பெயர்களில் குழப்பம் ஏற்படுகிறது.

ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் செயற்கையாக இல்லாமல் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. கிரிஸ் ரைடன்ஹாரின் இசையமைப்பு படத்திற்கு வலு சேர்கிறது.

மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் க்ரிம்’ புதிய அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *