சிம்பு மீது தொடரப்பட்ட மேலும் 2 வழக்கு வாபஸ்

சிம்பு மீது தொடரப்பட்ட மேலும் 2 வழக்கு வாபஸ்

அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய ‘‘பீப்’’ பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவாக சித்தரித்து பாடிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் 3 வழக்குகள் தொடரப்பட்டன.

பா.ம.க. சார்பில் ஒரு வழக்கும், விடுதலை சிறுத்தை சார்பில் 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் பா.ம.க. தொடர்ந்த வழக்கு ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டது. விடுதலை சிறுத்தை தென் சென்னை மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வக்கீல் காசி சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

9–வது பெருநகர் நீதிமன்ற நீதிபதி திலிப் அலெக்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் காசி ஆஜராகி, தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். கட்சி தலைமை உத்தரவிட்டதன் பேரில் வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக நீதிபதி முன் கூறியதை தொடர்ந்து வழக்கு வாபஸ் ஆனது.

இதேபோல கே.கே.நகர் பகுதி விடுதலை சிறுத்தை செயலாளர் புதியவன் என்கிற லட்சுமணன் சிம்பு–அனிருத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கும் இன்று வாபஸ் பெறப்பட்டது.

23–வது பெருநகர் நீதி மன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் முன் விசாரணை ஏற்பு மனு விசாரிக்கப்பட்டது. அப்போது அந்த வழக்கையும் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டன. சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.