‘வாலு’ வந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்..

Vaalu gets trolled in Social media

சென்னை: சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போவதை ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள். சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள படம் வாலு, அந்த படத்தில் நடிக்கையில் தான் சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து அதன் பிறகு பிரிந்துவிட்டனர். வாலு படம் இதோ ரிலீஸ் ஆகிறது என்று கூறி ஒரு தேதியை அறிவிப்பார்கள். பின்னர் சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிப்பு வரும். மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள். இப்படி பல காலம் கடந்து ஒரு வழியாக வாலு ஜுலை 17ம் தேதி ரிலீஸாகிறது என்றார்கள். ஆனால் அதற்கும் தற்போது வழியில்லை. காரணம் மேக்னம் ரேஸ் தயாரிப்பு நிறுவனம் வாலு ரிலீஸுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வாலு படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாள வினியோக உரிமையை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தங்களிடம் 2013ம் ஆண்டு விற்றார். தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. அதனால் ரிலீஸுக்கு தடை விதிக்கக் கோரி மேக்னம் ரேஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தின் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் வாலு படம் எப்பொழுது தான் வரும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் ஃபேஸ்புக்கில், வாலு வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் என்று தெரிவித்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.