‘டிப்ஸ்’ஸில் குறும்பு… பதிலடி கொடுத்த பணிப் பெண்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலுள்ள பெல்மார் நகரில் டீ.ஜேஸ் பார் அண்ட் க்ரில் எனும் உணவகத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிபவர் ஜெஸ் ஜோன்ஸ். கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, உணவு தயாராக தாமதமானதால், உணவகத்திற்கு வந்த எட்டு பேருக்கு, ஜெஸ் சற்று தாமதமாக பரிமாறினார்.

அவர்கள் ஜெஸ்ஸை கிண்டல் செய்யும் விதத்தில், தங்களுடைய பில்லில் உள்ள டிப்ஸ் பகுதியில் “ஒரு மணி நேரத்திற்கு” என குறிப்பிட்டு, “லொல்” (LOL-laughing out loud) என எழுதிவிட்டு சென்றனர். அந்த பில்லை புகைப்படமெடுத்த ஜெஸ், உணவு தாமதமானதற்கு தகுந்த காரணத்தையும் விளக்கி தனது முகநூல் கணக்கில் பதிவேற்றினார்.

“பில்லின் டிப்ஸ் பகுதியில் “லொல்” என்ற வார்த்தையை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் “லொல்” என எழுதியதற்கு பதிலாக “$0” என எழுதிவிட்டு சென்றிருக்கலாம்.

ஆனால் ஓர் உணவக பணிப்பெண்ணிற்கு இவ்வகையான கிண்டல்களும், மிகக்குறைந்த டிப்ஸ்களும் இயல்பான ஒன்றுதான். அவர்கள் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு தேவையான அளவு பானங்களையும், சமையலறை இன்று எப்பொழுதையும் விட பிசியாக இருக்கிறது என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டேன். ஐந்து வருடங்களாக சேவை துறையில் பணியாற்றும் நான், இதுவரை எனது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை அளித்தமைக்காக பெருமை கொள்கிறேன். அனைத்து உணவக பணியாளர்களின் சார்பாக நான் ஒன்றை கூற விரும்புகிறேன்.

நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு 2.50 டாலர்களை ஊதியமாக பெறுகிறோம். பலமுறை என்னுடைய ஊதியம், பாக்கெட்டிலிருக்கும் சில்லரைகளை விட குறைவாக இருக்கும். வரிகளையும், பில்களையும் நான் டிப்ஸாக பெறும் பணத்திலிருந்துதான் செலுத்துகிறேன். எல்லா உணவக பணியாளர்களின் நிலையும் இதுதான். நாங்கள் உங்களுடைய உணவக அனுபவத்தை சிறப்பிக்க மிகக்கடுமையாக உழைக்கிறோம். எனக்கு நடந்த இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. தேவையற்றதும் கூட. ஆனால் இது பல இடங்களில் மிக இயல்பாக நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். நீங்கள் ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்தும், உங்களுடைய பில் தொகை அதிகமாக இருந்தால், அது உங்களை எவ்வாறு எரிச்சலூட்டும் என எனக்கு தெரியும். ஆனால் உங்களுக்கு சேவை செய்யும் பணியாளர்களை காயப்படுத்துவது மிகவும் தவறான ஒன்று” என அந்த பதிவில் ஜெஸ் மேலும் கூறியிருந்தார்.

அந்த பதிவு சற்று நேரத்தில் வைரலானது. பதினோராயிரம் பேர் அதனை ஷேர் செய்துள்ளனர். அவர்களில் பெல்மார் நகரின் மேயரான மேட்டோஹர்டியும் ஒருவர். அவர் அதனை ஷேர் செய்து, “பெல்மார் நகருக்கு வருவோர், நீங்கள் உங்கள் பணியில் எந்தளவு மரியாதையை எதிர்பார்க்கிறீர்களோ, அதே அளவு மரியாதையை எங்கள் நகரில் உங்களுக்கு சேவை செய்யும் கடின உழைப்பாளிகளுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

bill_vc2