ஆஸ்கர் சாபம் ரஹ்மானையும் என்னையும் விடவில்லை: ரசூல் பூக்குட்டி

ஆஸ்கர் சாபம் ரஹ்மானையும் என்னையும் விடவில்லை: ரசூல் பூக்குட்டி

உலக சினிமாக்களின் பெருமதிப்பைப் பெற்ற ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரஹ்மானுடன், ரசூல் பூக்குட்டியும் சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக வென்றார்.

பொதுவாகவே, உலக அளவில் ஆஸ்கர் வெல்பவர் பலருக்கும் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காது என்பது ஆஸ்கரால் வரும் சாபம். ரசூலுக்கும் அதைவென்ற அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்தத் தொழிலைவிட்டு வேறு ஏதேனும் வேலைக்கு போகலாமா? என்று கூட எண்ணியதாக அவர் சமீபத்தில் கூறியுள்ளார்.

ரசூல், தனது நிலை படுமோசமாகி, கிரெடிட் கார்டு பில்லைக்கூட கட்ட முடியாமல், வங்கியில் லோன்போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக வருத்தத்துடன் கூறினார். அப்போது, ரஹ்மானை சந்தித்தபோது அவரும் இதே நிலையில் இருந்தது கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்கர் விருதை வாங்கியதால், ரசூலின் சம்பளம் பன்மடங்காய் அதிகரித்திருக்கும் என எண்ணி எந்த இயக்குனரும் தன்னை அணுகவே யோசித்ததாக அவர் கூறினார். பிரம்மாண்டமான படங்களை எடுத்து பெயர் வாங்கிய பாலிவுட் இயக்குனர், சஞ்சய் லீலா பன்ஷாலியே இவ்வாறு எண்ணியதுதான் தனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்ததென தெரிவித்த அவர் பின்னர், சின்னச் சின்ன சுதந்திரமான படங்களுக்கு ஒலி வடிவமைப்பு செய்யத் தொடங்கினார்.

ஆஸ்கர் வாங்கியதாலே ‘அந்த விருது வாங்கியவருக்கு நாம் என்ன சொல்வது, அவரே படத்துக்கேற்ப எல்லாவற்றையும் செய்து விடுவார்’ என ஒரு சாராரும், ‘இவரிடம் நாம் நினைக்கும் வேலையை வாங்க முடியாது, அவரது விருப்பப்படிதான் ஒலியை வடிவமைப்பார். நமது எண்ணத்தைக் கண்டுகொள்ளவே மாட்டார்’ என தன்னை அணுகும் இயக்குனர்களின் மன ஓட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

தன்னுடைய விருப்பமான பாணியில் ஒலி வடிவமைப்பு செய்ய தானே படம் எடுத்தால்தான் உண்டு என உணர்ந்த ரசூல் சமீபத்தில் தனது சினிமா நண்பர்கள் சிலருடன் இணைந்து ‘லெ பெண்டா எண்டர்டெயின்மெண்ட்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து விரைவில் படம் தொடங்க இருக்கிறார். அந்தப் படத்தில் தயாரிப்பு மட்டுமின்றி, இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பு என மூன்று பணிகளில் தானே ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களை இயக்க உள்ளதாக ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.