நான் சுதந்திரமாக இருக்கிறேன்: சுருதிஹாசன்

நான் சுதந்திரமாக இருக்கிறேன்: சுருதிஹாசன்

நான் சுதந்திரமாக செயல்படுகிறேன் என்கிறார் சுருதிஹாசன்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டி…

எந்த விஷயமாக இருந்தாலும் என் அப்பாவிடம் மனம் திறந்து பேசும் சுதந்திரம் எனக்கும் என் தங்கை அக்ஷராவுக்கும் அவர் கொடுத்துள்ளார். எல்லா சர்ச்சையும் நடக்கும். என்ன சொன்னாலும் அப்பா சந்தோஷமாக பேசுவார்.

சினிமாவிற்கு கையெழுத்திடும் போது அப்பா, அம்மாவின் ஆலோசனையை கேட்க மாட்டேன். எல்லா முடிவையும் நான்தான் எடுக்கிறேன். கமல், சரிகா என்றால் எனக்கு இஷ்டம். காரணம், அவர்கள் என் பெற்றோர்.

எந்த வேலை செய்தாலும் அதை சரியாக செய்தோமா இல்லையா என்பதுதான் முக்கியம். அப்பாவுக்கு கூட நீங்கள் ‘கால்ஷீட்’ கொடுக்க முடியவில்லையாமே என்கிறார்கள். அப்பா என்னோடு சேர்ந்து பணியாற்ற விரும்பினார். ஆனால் இப்போதைக்கு தேதி ஒதுக்க முடியவில்லை. அது என் கையில் இல்லாத விஷயம் அல்லவா?.

சினிமா, இசை இரண்டும் பொறுப்பை கூடுதலாகி விட்டதா? என்கிறார்கள். என் அப்பாவுக்கு நல்ல குரல் உள்ளது. அது எனக்கும் வந்தது. அம்மா இசையின் மீது எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தினார். நான் மிகச் சிறிய வயதில் இருந்த போதே அற்புதமான இசையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதே போல நடிப்பு, சினிமா, இசை மீது அப்பாவுக்கு இருந்த ஆர்வம் எனக்கும் அப்படியே வந்து விட்டது.

இது போன்ற ஒரு வீட்டில் வளர்ந்தது உண்மையில் அற்புதமான அனுபவம். ஏழு படங்களில் இப்போது நடிப்பதால் இசைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இசை என்றால் தற்போதைக்கு வீட்டிற்கு சென்று பியானோ வாசிப்பது மட்டும்தான். அது எனக்கு மிகவும் பிடிக்கும். டைனிங் டேபிளில் யாரும் சினிமா பற்றி பேச மாட்டோம். ஒருவரை ஒருவர் மிகவும் கவுரவித்துக் கொள்வோம். அனைவரும் அவரவர்களாகவே சொந்தமாக வளர வேண்டும். ஆலோசனை வழங்க எந்த நேரத்திலும் பெற்றோர் தயாராக இருப்பார்கள். அப்பா எப்பவும் டச்சில் இருப்பார். அது அவர் எனக்கு போன் பண்ணி ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் மட்டுமல்ல, என் தங்கை அக்ஷராவுடைய பயணமும் சுதந்திரமானதுதான்.