அஜித்தின் மற்றுமொரு புதிய அவதாரம்

அஜித் சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல புகைப்படக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல், ரேஸ் கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது, ஹெலிகாப்டர் பறக்கவிடுவது, பிரியாணி சமைப்பது என பல்வேறு பரிமாணங்களிலும் தனது தனிப்பட்ட திறமையை நிரூபித்து வருகிறார். இவர் விமானத்தை ஓட்டும் உரிமம்கூட வாங்கி வைத்துள்ளார். இதையெல்லாம் மீறி, அவர் கிதார் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

ஆம், அஜித் கிதார் வாசிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இவர், பிசியான ஷெட்யூலிலும் கிதார் வாசிப்பதற்காக காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம். இதை, அவருக்கு கிதார் கற்றுக் கொடுக்கும் ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்டீவ் வாட்ஸ், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரிடம் நிறைய படங்களில் கிதாரிஸ்டாக பணியாற்றியுள்ளார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உப்புக் கருவாடு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

அஜித்துக்கு கிதார் கற்றுக் கொடுப்பது குறித்து இவர் கூறியதாவது:-

நான் முதலில் ஒரு கிதார் பயிற்சியாளராகத்தான் ஆக விரும்பினேன். ஆனால், ராதாமோகன் என்னை இசையமைப்பாளராக்கிவிட்டார். இருப்பினும், நிறைய பேருக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். சினிமாவில் சூர்யா, இயக்குனர் கௌதம் மேனன், அஜித் ஆகியோருக்கு கிதார் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

இதில் அஜித், கிதாரை கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவர் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து, கிதார் கற்றுக் கொண்டார். அவருக்கு இப்போது கிதார் கற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை. இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது என்னிடம் வந்து கண்டிப்பாக கற்றுக் கொள்வேன் என்றார். அவருடைய சின்சியாரிட்டி, ரொம்ப சீக்கிரத்தில் கற்றுக் கொள்ளும் விதம், இவை எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இவ்வாறு ஸ்டீவ் வாட்ஸ் கூறினார்.