கெத்து (2016) – திரை விமர்சனம்

நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
நடிகை :எமிஜாக்சன்
இயக்குனர் :திருகுமரன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :சுகுமார்
விக்ராந்த் ஒரு ஸ்னைப்பர் (Sniper). பணத்திற்காக ஒரு விஞ்ஞானியை கொலை செய்யும் பணி இவருக்கு வருகிறது. இதற்காக இவர் குமிளி பகுதிக்கு செல்கிறார்.

குமிளியில் நூலகம் வைத்திருக்கும் உதயநிதிக்கும், எமி ஜாக்சனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்று நோக்கத்தில் இருக்கும் எமி ஜாக்சனுக்கு, உதயநிதி உதவி செய்கிறார். இதனால், உதயநிதி மீது எமி ஜாக்சனுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால், உதயநிதியோ எமி ஜாக்சன் மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

உதயநிதியின் அப்பாவான சத்யராஜ் ஒரு பி.டி. மாஸ்டர். இவர் வேலை பார்க்கும் பள்ளிக்கு அருகே ஒரு டாஸ்மாக் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படுகிறது. இதனை கண்டித்து டாஸ்மாக் நடத்திவரும் மைம் கோபி மீது வழக்கு தொடர்கிறார்.

இதனால் கோபமடையும் மைம் கோபி சத்யராஜூக்கு தொந்தரவு செய்கிறார். ஒரு கட்டத்தில் மூட சொன்ன டாஸ்மாக்கில் வைத்து சத்யராஜை வில்லன் ஆட்கள் அடிக்க வரும்போது சாதுவாக இருந்த உதயநிதி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து, சத்யராஜ் கண்முன்னே அவர்களை அடித்து நொறுக்கிறார். மறுநாள் மைம் கோபி குமளியில் ஒரு நீர்விழ்ச்சியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவர் கையில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க போலீஸ் அவரை கைது செய்கிறது.

இறுதியில், சத்யராஜ் குற்றமற்றவர் என்று உதயநிதி நிரூபித்தாரா? மைம் கோபியை கொலை செய்தது யார்? விக்ராந்த் விஞ்ஞானியை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதுவரை காதல் நாயகனாக வலம் வந்த உதயநிதி, இப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் இவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். புக் திருடியாக வரும் எமி ஜாக்சன், உதயநிதி மீது காதல் கொள்வது என சிறப்பாக நடித்திருக்கிறார்.

அப்பாவாக வரும் சத்யராஜ் கொடுத்த கதாபாத்திரத்தை மிக யதார்த்தமாக செய்துள்ளார். பொறுப்புள்ள அப்பாவாகவும், பி.டி. மாஸ்டராகவும் அசத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் விக்ராந்த், பார்வையாலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். படத்தில் சொல்லும்படி வசனம் இல்லை என்றாலும், இவரது பார்வை பல வசனங்களை பேச வைத்திருக்கிறது. இவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஏதோ செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரை காட்டும் போதே தொற்றி கொள்கிறது.

வித்தியாசமான கதைக்களம் கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் திருகுமரன். திரைக்கதையில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பு இல்லாமல் நகர்ந்திருக்கிறது. விக்ராந்த் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட். இந்த பாடல்கள் சுகுமாரின் ஒளிப்பதிவோடு பார்க்கும்போது கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கெத்து’ மாஸ்.