இன்று நேற்று நாளை திரை விமர்சனம் (2015)

 Movie: [usr=3.5 size=20]
நடிகர் : விஷ்ணு
நடிகை :மியா ஜார்ஜ்
இயக்குனர் :ரவி குமார் ஆர்
இசை :ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஓளிப்பதிவு :வசந்த்
ஒரு மனிதனை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் கொண்டு செல்லும் நவீன கற்பனைப் படைப்பு தான் டைம் மிஷின். அத்தகைய ஒரு டைம் மிஷினை 2065-ல் கண்டுபிடிக்கிறார் ஆர்யா. ஆனால், அதனை சோதனைக்கு உட்படுத்தும்போது 2015ம் ஆண்டுக்கு சென்று விடுகிறது. ஆனால், அங்கிருந்து திரும்பவில்லை.இதற்கிடையே 2015ம் ஆண்டு காலத்திற்கு சென்ற டைம் மிஷின் விஷ்ணு, அவரது நண்பர் கருணாகரன் இவர்களுடன் விபத்தில் நண்பராகும் விஞ்ஞானி கார்த்திக் ஆகியோர் கையில் கிடைக்கிறது. கார்த்திக் இந்த மிஷினைப் பற்றிய முழு விவரங்களையும் விஷ்ணுவிடம் கூற எல்லோரும் வியப்பில் உறைகின்றனர். ஆனால், மிஷினை சரி செய்யும் போது கார்த்திக் ஷாக் அடித்து இறந்து விடுகிறார்.

அதன் பிறகு இந்த மிஷினை கைப்பற்றும் விஷ்ணு மற்றும் கருணா இருவரும், அதை வைத்து கடந்த காலத்தில் காணாமல் போன பொருட்களை தேடிக் கண்டுபிடித்து பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்த முயற்சியின் ஒரு கட்டத்தில் இந்த மிஷினே இவர்களுக்கு பாதகமாக மாறுகிறது.

இந்த மிஷினால் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதை வித்தியாசமான திரைக்கதை, வியக்க வைக்கும் விஷூவல் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணுவின் படம் வரிசையில் இந்த படமும் அமைந்திருக்கிறது. தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சொந்த தொழில் செய்யவேண்டும் என்று முயற்சி செய்து வரும் இவருக்கு டைம் மிஷின் கிடைத்தவுடன் அதை வைத்து தனது தொழிலிலும் காதலிலும் வெற்றியடைய இவர் முயற்சிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

விஷ்ணுவிற்கு காதலியாக வரும் மியா ஜார்ஜ் பொறுப்பான காதலியாகவும், அன்பு மகளாக வந்தும் மனதில் பதிகிறார். முந்தைய படத்தைவிட அழகாக வந்து சென்றிருக்கிறார். நண்பராக வரும் கருணாகரனின் காமெடி, ரசிகர்களை பஞ்சம் வைக்காமல் சிரிக்க வைத்திருக்கிறது. சீரியஸான காட்சிகளில் கூட ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். விஷ்ணுவும் கருணாவும் படத்தின் முழுப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள். குழந்தை என்று பெயர் வைத்துக் கொண்டு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ரவி சங்கர்.

டைம் மிஷினை வைத்து ஹாலிவுட்டில் பல நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ‘இன்று நேற்று நாளை’ படம்தான் தமிழில் வந்த முதல் டைம் மிஷின் பற்றிய படம். முதல் படத்திலேயே தன் வெற்றியை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை சோர்வடையவிடாமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, தெளிவான திரைக்கதை, காமெடி என அனைத்து இடங்களிலும் பாராட்டு பெற்றிருக்கிறார் இயக்குனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘இன்று நேற்று நாளை’ எல்லா நாளும் சுவாரஸ்யம்.