யட்சன் – திரை விமர்சனம்

Movie: [usr=3.0 size=20]
நடிகர் : ஆர்யா
நடிகை :தீபா சன்னிதி
இயக்குனர் :விஷ்ணுவர்தன்
இசை :யுவன் சங்கர்ராஜா
ஓளிப்பதிவு :ஓம் பிரகாஷ்
தூத்துக்குடியில் லோக்கல் ரவுடியான சில்வாவின் அடியாளை கொன்றுவிட்டு, சென்னைக்கு தப்பி வந்து திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் தங்குகிறார் ஆர்யா. இங்கிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல வேண்டும் என்பதே இவரது திட்டம்.

அதேவேளையில், பழனியில், சொந்த தொழிலை பார்க்க விரும்பாத கிருஷ்ணா, சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில், தனது காதலி சுவாதியின் உதவியோடு சென்னைக்கு வந்து ஆர்யா தங்கியிருக்கும் மேன்சனுக்கு அருகிலேயே தங்குகிறார்.

ஆர்யா, வெளிநாடு செல்வதற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, ஆர்யாவை தூத்துக்குடியில் ஒரு கொலை விஷயமாக பார்க்க வந்த தம்பிராமையா, அவரை சென்னையில் பார்த்ததும், தன்னுடைய வேலைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரிடம் நாயகி தீபா சன்னிதியை கொலை செய்தால் நிறைய பணம் தருவதாக கூறுகிறார்.

ஆர்யாவுக்கும் பணம் தேவைப்படுவதால், தம்பி ராமையா சொன்ன வேலையை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படி தீபா சன்னிதியை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.

இதற்கிடையில், சென்னையில் ஹீரோ வாய்ப்பு தேடி அலையும் கிருஷ்ணாவுக்கு அஜித் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் இருவருடைய பணியும் ஒரே நாளில் நடக்கிற மாதிரியான சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்போது, இவர்கள் தங்கியிருக்கும் மேன்சனுக்கு அருகில் நிற்கும் வேறு வேறு கார்களில் இருவரும் மாறி மாறி ஏறிச் சென்றுவிடுகிறார்கள். அதாவது, சூட்டிங்குக்கு செல்ல வேண்டிய கிருஷ்ணா, தீபா சன்னிதியை கொலை செய்ய வேண்டிய இடத்துக்கு சென்று விடுகிறார். கொலை செய்ய வேண்டிய இடத்துக்கு போக வேண்டிய ஆர்யா, சூட்டிங்குக்கு சென்று விடுகிறார்.

இறுதியில், ஆர்யா தீபா சன்னிதியை கொலை செய்தாரா? கிருஷ்ணா பெரிய நடிகர் ஆனாரா? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர்.

எல்லா படங்களிலும் நாயகியுடன் டூயட் மற்றும் ரொமான்ஸ் செய்து வந்த ஆர்யாவை இந்த படத்தில் இயக்குனர் தனிமையிலேயே சுற்ற விட்டிருக்கிறார். இருப்பினும் இயல்பான நடிப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். காதலைக்கூட அறிய முடியாத இளைஞனாக பளிச்சிடுகிறார்.

கிருஷ்ணா, துறுதுறுவென நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். சுவாதியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிப் போகும் இளைஞனாக நடிப்பில் அழுத்தம் பதித்திருக்கிறார். செய்யாத குற்றத்துக்கு இவர் மாட்டி தவிக்கும் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது.

தீபா சன்னிதி, ஆடையில் கவர்ச்சியை காட்டாமல் முக கவர்ச்சியால் ரசிகர்களை கவர்கிறார். சுவாதியும் தனது துறுதுறு நடிப்பால் அனைவரையும் ஈர்க்கிறார். பேச்சில் ஆண்மை தன்மையையும், அழகில் இளைஞர்களை கவரும்படியாக அழகு பதுமையாகவும் காட்சியளிக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. இவருக்கான வசனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

தீபா சன்னிதியை கொலை செய்யும் பொறுப்பு ஏற்று வரும் தம்பி ராமையா, அதை சரிவர முடிக்க முடியாமல் திணறும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. ஒய்.ஜி.மகேந்திரன் ஒருசில காட்சிகள் வந்தாலும், மனதில் பதிகிறார்.

மாஸ் படங்களின் இயக்குனர் என்று பெயர் எடுத்த விஷ்ணுவர்தன், புது முயற்சியாக இப்படத்தை முழு நீள காமெடி படமாக எடுக்க முடிவு செய்து எடுத்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழகாக காட்சிகளை அமைத்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையும் மிரட்டுகிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இரு கதாபாத்திரங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் ஒளியமைப்பில் மாறுபாடுகள் செய்து ஒளிப்பதிவு செய்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘யட்சன்’ ஏமாற்றவில்லை.