விந்தை – திரை விமர்சனம்

Movie: [usr=1.5 size=20]

முழுக்க போலீஸ் நிலையத்திலேயே படமாக்கியிருக்கும் படம் ‘விந்தை’.

படம் ஆரம்பத்தில் நாயகி மனிஷாவும், நாயகன் மகேந்திரனும் ஓடிவந்து ஒரு லாரியில் ஏறி தப்பித்து சென்னைக்கு வருகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால், அவர்களை போலீஸ், அழைத்து வந்து ஸ்டேஷனில் காவல் வைக்கிறது.

திருமணக் கோலத்தில் இருக்கும் நாயகியை பார்க்கும் போலீஸ் அதிகாரியான மகாநதி சங்கர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், திருமணத்தை நிறுத்திவிட்டு இருவரும் தப்பித்து ஓடி வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கிறார்.

ஆனால், போலீஸ் நிலையத்தில் இவர்களை சரியாக விசாரிக்காமல் நேரம் கடத்துகின்றனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு வரும் விவாகரத்து கேஸ், நாய் காணாமல் போன கேஸ் உள்ளிட்ட பல கேஸ்களை மட்டுமே விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகேந்திரன் போலீசிடம் சென்று எங்களை விட்டுவிடும் படியும், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, தங்களுக்கு என்ன பிரச்சனை நாங்கள் எதற்காக ஓடி வந்துதோம் என்று கூற முயற்சிக்கிறார். ஆனால், போலீசாரோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வதில்லை.

மாறாக, எல்லாம் எங்களுக்கு தெரியும், உங்களை மாதிரி எத்தனை காதல் ஜோடியை பார்த்திருப்பேன். உங்கள் பெற்றோர்கள் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்திருப்பார்கள் என்று அறிவுரைகளை கூறி மகேந்திரன் மற்றும் மனிஷாவை பேச விடாமல் செய்கிறார்கள்.

இறுதியில், மகேந்திரன் மற்றும் மனிஷா இருவரும் யார்? எதற்காக இவர்கள் ஓடி வந்தார்கள்? இந்த ஜோடி ஒன்று சேர்ந்ததா? என்பதை முழுக்க முழுக்க போலீஸ் நிலையத்திலேயே படமாக்கி சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரனுக்கு பெரிதாக வேலையே இல்லை. குழந்தை நட்சத்திரமாக மற்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் வருவது போல் இந்த படத்திலும் வந்து செல்கிறார். கடைசி 15 நிமிடம் மட்டுமே இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மற்ற நேரத்தில் முழு நேரமும் போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சிலேயேதான் உட்கார்ந்திருக்கிறார்.

நாயகி மனிஷா ஜித், மகேந்திரனைவிட சிறிதளவே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் திறமையாக செய்திருக்கிறார். தமிழ் புலவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

மனோபாலா, மகாநதி சங்கர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் லாரா, படத்தில் காமெடி என்னும் பெயரில் நிறைய காட்சிகளை சொதப்பியிருக்கிறார். ஒரு சில காட்சிகள் பார்ப்பதற்கு சிரிப்பு வந்தாலும், பல காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

திறமையான நடிகர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை கையாள தெரியாமல் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர். போலீஸ் நிலையத்திலேயே படம் நகர்வதால் படம் சற்று போரடிக்கிறது.

போலீஸ் நிலையத்தில் நடைபெறும் காட்சிகளை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். அந்த காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமலேயே செல்கிறது. பல காட்சிகள் திரைக்கதைக்காக வேண்டும் என்றே திணித்தது போல் உள்ளது.

வில்லியம்ஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. போலீஸ் நிலையத்திலேயே காட்சிகள் இருப்பதால் ஒளிப்பதிவாளர் ரத்தீஷ் கண்ணாவிற்கு அதிகம் வேலையில்லை.

மொத்தத்தில் ‘விந்தை’ வியக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *