உப்பு கருவாடு (2015) – திரை விமர்சனம்

நடிகர் : கருணாகரன்
நடிகை :நந்திதா
இயக்குனர் :ராதாமோகன்
இசை :ஸ்டீவ் வாட்ஸ்
ஓளிப்பதிவு :மகேஷ் முத்துச்சாமி
சினிமாவில் ஒரு தோல்வி படத்தை கொடுத்துவிட்டு, அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கும் நண்பர்களாக கருணாகரன், சாம்ஸ், நாராயணன். இவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக தங்கி படம் எடுக்க சான்ஸ் தேடி வருகிறார்கள்.

அப்போது, இவர்களுடைய மற்றொரு நண்பரான மயில்சாமி, தன்னிடம் ஒரு தயாரிப்பாளர் இருப்பதாகவும், ரூ.2 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறி அவரிடம் அழைத்து செல்கிறார்.

மீன் ஏற்றுமதி செய்யும் பெரிய தொழிலதிபரான எம்.எஸ்.பாஸ்கர்தான் அந்த தயாரிப்பாளர். தனது இரண்டாவது தாரத்தின் மகளான நந்திதாவை ஹீரோயினாக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இவர் படம் தயாரிக்க முன்வருகிறார்.

கருணாகரன் மற்றும் அவரது நண்பர்கள் இவரது மகளான நந்திதாவை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க முன்வந்ததும், படத்தை இயக்கும் வாய்ப்பினை இவர்களுக்கு வழங்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். கருணாகரனும், அடுத்த படத்தையாவது பெரிய ஹிட் படமாக கொடுக்கவேண்டும் என்று கதை விவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், எப்பொழுதும் குழந்தை சுபாவத்துடனே இருக்கும் நந்திதா பற்றி இவர்களுக்கு தெரிய வருகிறது. சுட்டுப் போட்டாலும் அவருக்கு நடிப்பு என்பது கொஞ்சம் கூட வரவேயில்லை. இதனால், நண்பர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இறுதியில், நடிப்பே வராத நந்திதாவை நண்பர்கள் எப்படி நடிக்க வைத்தார்கள்? அந்த படத்தை ஹிட் படமாக கொடுத்து வாழ்க்கையில் முன்னேறினார்களா? என்பதை படத்தில் கலகலப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதாநாயகனான கருணாகரன், இதுவரையிலான படங்களில் காமெடியாக நடித்தவர், இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததால் என்னவோ, ரொம்பவும் சீரியசாகவே நடித்திருக்கிறார். சீரியசாக இருக்கும்போதும் காமெடி பண்ண முடியும் என்பதை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவருக்கு அடுத்த படியாக எந்நேரமும் சகுனம் பார்ப்பதையே வழக்கமாக கொண்டு வரும் மயில்சாமியும் காமெடியில் கலகலக்க வைக்கிறார். இவருக்கு போட்டியாக சாம்ஸ், டவுட் செந்திலும் நடிப்பிலும், காமெடியிலும் அசத்தியிருக்கிறார்கள்.

நந்திதா தனது குழந்தைத் தனமான நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். ராதா மோகனின் படங்களில் குமரவேலுக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். அது இப்படத்திலும் பளிச்சிடுகிறது. உமா என்ற கதாபாத்திரத்தில் வரும் ரஷிதா, சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார்.

ஒரு இயக்குனருக்கு தன்மீதும், தன் திறமை மீதும் நம்பிக்கை இருந்தால் எந்தவொரு நடிகரையும் வைத்து ரசிக்கும்படியான படத்தை கொடுக்கமுடியும் என்பதை ராதா மோகன் இந்த படம் மூலம் காட்டியிருக்கிறார். படத்தில் பெரிதாக கதை ஒன்றும் கிடையாது. ஒரு படத்தை எப்படி எடுப்பது என்பதுதான் படத்தின் மொத்த கதையே. அதை அழகான வசனங்கள் மூலம், முழுக்க காமெடியாக சொல்லி அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தின் வசனங்கள்தான் கதையை தூக்கி நிறுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது உண்மைதான். அதுமட்டுமில்லாமல், கவர்ச்சி, வன்முறை இல்லாத ஒரு அழகான படத்தை கொடுத்ததற்காக ராதா மோகனை பாராட்டலாம்.

ஸ்டீவ் வாட்ஸ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். மகேஷ் முத்துச்சுவாமியின் கேமரா, காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, கடற்கரை காட்சிகளை பதிவு செய்த விதம் அருமை.

மொத்தத்தில் ‘உப்பு கருவாடு’ ருசி.