நல்ல கதை கிடைத்தால் சினிமா தயாரிப்பேன்: யுவன் சங்கர் ராஜா

நல்ல கதை கிடைத்தால் சினிமா தயாரிப்பேன்: யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்கள் ஒருவராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் வருகிற ஜனவரி 26-ந் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் ‘வாய்ஸ் ஆப் யுவன்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

நவீன தொழில்நுட்ப வசதியுடன் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சி குறித்து, யுவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘வாய்ஸ் ஆப் யுவன்‘ இசை நிகழ்ச்சி மலேசியா, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரை மதுரையில் இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே ‘வாய்ஸ் ஆப் யுவன்‘ இசை நிகழ்ச்சியை நவீன தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்டமான முறையில் வருகிற ஜனவரி மாதம் 26–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, என்னையும் என் அப்பா இளையராஜாவையும் ஒருதுளிகூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர் எங்கோ இருக்கிறார். நான் எங்கோ இருக்கிறேன். நான் இப்போது தான் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

தற்போது ‘தருமி’ என்ற புதிய படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை வந்ததில்லை. ஆனால் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக தயாரிப்பில் ஈடுபடுவேன்.

என் வாழ்வில் முழுமையான வெற்றி கிடைத்துவிட்டதாக நான் இதுவரை நினைக்கவில்லை. வெற்றிக்காக தினம் தினம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு போட்டியாக நான் என்னை தான் நினைக்கிறேன்.

இளம் இசை அமைப்பாளர்கள் அதிக அளவில் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் போட்டி அல்ல. அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நல்ல நண்பனாக தான் நான் இருப்பேன்… இருக்கிறேன்.

தற்போதைய இசை கவிதையின் கருத்தை மறைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் என் இசையில் வரிகளின் அர்த்தம் கேட்பது போல இசை அமைக்கிறேன். இயக்குனர்கள் வேண்டுகோளுக்கிணங்க இசை அமைக்க வேண்டியுள்ளது என்றார்.