பெண்மை கலந்த கதாபாத்திரம் என்பதால் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் நடிக்க மறுத்த ஷாருக்கான்

பெண்மை கலந்த கதாபாத்திரம் என்பதால் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் நடிக்க மறுத்த ஷாருக்கான்

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஆயிரம் வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தில் வரும் ராஜ் கதாபாத்திரம் பெண்மை கலந்த கதாபாத்திரம் என்பதால் அந்தப் படத்தில் நடிக்க முதலில் மறுத்ததாக 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் ஷாருக்கான் தற்போது தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், கஜோல், அனுபம் கெர், கரண் ஜோஹர் ஆகியோரின் நடிப்பில் அறிமுக இயக்குனரான ஆதித்யா சோப்ரா இயக்கிய காதல் படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ (துணிச்சல் உள்ளவன் மணமகளை தூக்கிச் செல்வான் என்பது இந்த தலைப்பின் தமிழ்ப் பொருளாகும்).

காதல்ரசம் சொட்டும் அருமையான கதையம்சம், செவிக்கினிய பாடல்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சி போன்றவற்றால் 1995-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ‘சூப்பர் டூப்பர்’ ஹிட்டாகி வசூலை அள்ளிக் குவித்தது. இந்தியாவையும் கடந்து ஷாருக்கானின் புகழ் வெளிநாடுகளிலும் பரவ இந்தப் படத்தின் வெற்றி மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

ரசிகர்களின் வேண்டுகோளின்படி, ரிலீஸ் செய்யப்பட்ட நாளில் இருந்து மும்பையில் உள்ள ‘மராத்தா மந்திர்’ தியேட்டரில் இந்தப் படம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. ஆயிரமாவது வாரத்தை கடந்து ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.

திரையரங்கில் 3 வாரம் ஓடினாலே வெற்றி நடை போடுவதாக சொல்லப்படும் இந்தக் காலத்தில் உலகின் எந்த மொழி திரைப்படமும் இதுவரை சாதித்திராத, இனியும் சாதிக்க முடியாத ஒரு உச்சகட்ட சாதனையை ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் செய்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் வரும் ராஜ் என்ற கதாநாயகன் பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள முதலில் மறுத்துவிட்டதாக நடிகர் ஷாருக்கான் தற்போது தெரிவித்துள்ளார்.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் 20 ஆண்டு சாதனையை கொண்டாடும் வகையில் ஒருமணி நேரம் ஓடக்கூடிய டாக்குமென்ட்டரி (குறும்படம்) தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறாமல் வெட்டுப்பட்ட காட்சிகள், இரண்டாம் கதாநாயகியாக நடித்த ஜூஹி சாவ்லா நடிப்பில் படமாக்கப்பட்டு, வெளிவராத சில காட்சிகள், டவலை மட்டும் சுற்றியபடி, ‘மேரே காபோன்மே ஜோ ஆயே’ (என் கனவில் நீவந்த வேளை) என தொடங்கும் பாடல் காட்சியில் நடிக்க கதாநாயகி கஜோல் மிகவும் தயக்கம் காட்டியது, கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சண்டை இடம்பெற்றே தீரவேண்டும் என்று ஷாருக்கான் பிடிவாதம் செய்தது, போன்ற சுவாரஸ்யமான பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக ‘டர்ர்’, ‘பாஜிகர்’, ‘அன்ஜாம்’ போன்ற அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிக்கொண்ட ஷாருக்கான், பெண்மை கலந்த நளினத்துடன் கதாநாயகன் ராஜின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்ததால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முதலில் மறுத்து விட்டேன் என இந்த டாக்குமண்டரியில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

பின்னர், நடிக்க சம்மதித்து, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் எனது சகோதரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மிகவும் சோகமாக இருந்தபோது, இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கஜோல், அனுபம் கெர், துணை இயக்குனராக பணியாற்றிய கரண் ஜோஹர், நடன இயக்குனராக இருந்து, இயக்குனராக உயர்ந்த ஃபரா கான், ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்தப் படத்தை உருவாக்கிய காலத்தில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை இந்த “Making of DDLJ” என்ற டாக்குமன்டரியில் பதிவு செய்துள்ளனர்.