ரெயில்களில் படப்பிடிப்பு கட்டணம் திடீர் உயர்வு

ரெயில்களில் படப்பிடிப்பு கட்டணம் திடீர் உயர்வு

தமிழ், தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகள் பெருமளவு ரெயில்களில் நடக்கின்றன. பல நாட்கள் ரெயில்களை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இதற்காக ரெயில்வே துறை கட்டணம் வசூலிக்கிறது. அந்த கட்டணம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.வருகிற ஆகஸ்டு 1–ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது. இந்தி படத்தில் நடிகர் ஷாருக்கானும், மாளவிகா அரோராவும் பாடிய சைய சையா பாடல் நீலகிரி மலை ரெயிலில் படமாக்கப்பட்டது. அதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தினர். அதே போன்ற பாடல் காட்சியை ஆகஸ்டு 1–க்கு பிறகு ரெயிலில் படமாக்கினால் இரு மடங்கு கட்டணம் கொடுக்க வேண்டும்.

ரெயில்களில் எடுக்கப்படும் படங்கள் ஹிட்டாவதாக பட உலகில் ஒரு சென்டிமென்டே உலாவுகிறது. அதற்கு இப்போது சிக்கல் வந்துள்ளது. ஆகஸ்டில் அமல்படுத்தப்போகும் புது கட்டண விவரங்களையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு ரெயில்களில் படப்பிடிப்பு நடத்த ரூ.4½ லட்சம் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். தற்போது ஒருநாள் கட்டணமாக 2 லட்சத்து 30 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ரெயிலையே படப்பிடிப்புக்கு வாடகைக்கு எடுத்தால் 4 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீட், பெர்த்களுக்கும் படப்பிடிப்பு கட்டணம் இரு மடங்காகி உள்ளது.