சான் ஆண்ட்ரியாஸ் – திரை விமர்சனம்

Movie: [usr=4.0 size=20]

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன். இவர் எந்நேரமும் மீட்புப் பணியிலேயே தனது கவனத்தை செலுத்துவதால், இவர்மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் இவரது மனைவி.

இந்நிலையில், ஒரு விபத்தில் தனது இளையமகளை பறிகொடுக்கும் ஜான்சன், அவளை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் எந்நேரமும் சோகமாகவே வலம் வருகிறார்.

இதுபிடிக்காத இவரது மனைவி இன்னொருவருடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள். கூடவே தனது மகளையும் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால், மகளுக்கோ ஜான்சனுடன் இருக்கவே பிடிக்கிறது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 350 மைல் தூரத்தில் இருக்கும் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் நடக்கும் ஒரு விளையாட்டில் கலந்துகொள்வதற்காக ஜான்சனின் மகள் செல்கிறாள். அந்த சமயத்தில் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய சுனாமியும் ஏற்படுகிறது.

தனது இளைய மகளை பறிகொடுத்ததுபோல், இவளையும் பறிகொடுத்துவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் ஜான்சன், அவளைத் தேடி சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு செல்கிறார். செல்லும் வழியில் ஆங்காங்கே பூமி பிளந்து கிடக்கிறது.

இதையெல்லாம் மீறி ஜான்சன் சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு சென்று தனது மகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள்தான். நிலநடுக்கத்தால் பூமியே ஒரு பாய் போல் சுருள்வது, பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுவது, சுனாமி காட்சிகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.

குறிப்பாக சுனாமியை எதிர்கொண்டு ஒரு படகில் ஜான்சன் செல்லும் காட்சிகள் எல்லாம் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை கொண்டு வந்திருக்கின்றன. இந்த படத்தில் டுவெய்ன் ஜான்சன், ஒரு பாசக்கார அப்பாவாகவும், திறமையான வீரராகவும் பளிச்சிட்டிருக்கிறார்.

டுவெய்ன் ஜான்சனுக்கு மகளாக நடித்திருப்பவரும், மனைவியாக நடித்திருப்பவரும் அழகாக இருப்பதோடு, கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இயக்குனர் ப்ராட் பெய்டன் ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்திருக்கிறார். மகளை தேடி ஜான்சன் செல்லும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை படபடக்க வைக்கும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. மேலும், 3டி கிராபிக்ஸ் மூலம் படத்தை பார்ப்பது பிரம்மாண்டமாகவும், உயிரோட்டமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் சான் ஆண்ட்ரியாஸ் அழிவு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *