சகலகலா வல்லவன் – திரை விமர்சனம்

Movie: [usr=3.5 size=20]
நடிகர் : ஜெயம் ரவி
நடிகை :த்ரிஷா
இயக்குனர் :சுராஜ்
இசை :தமன்
ஓளிப்பதிவு :யுகே செந்தில்குமார்
தென்காசி பட்டணத்தில் சேர்மனாக இருக்கிறார் பிரபு. இவருடைய மகன் ஜெயம் ரவி. இவர்களுக்கும் இதே ஊரில் இருக்கும் சூரி குடும்பத்திற்கும் 3 தலைமுறைகளாக பகை இருந்து வருகிறது. இதனால் ஜெயம் ரவியும் சூரியும் எதிரியாக இருந்து வருகிறார்கள். சூரியின் அத்தை மகளான அஞ்சலியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஜெயம் ரவி. அஞ்சலியுடன் பேசி பழகுவதற்காக சூரியின் குடும்பத்தின் மேல் உள்ள பகையை மறந்து சமாதானம் பேசுகிறார் ஜெயம் ரவி. பின்னர் அஞ்சலியும் காதலிக்க இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மாமாவான ராதாரவி தன் மகள் திரிஷாவின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க, சென்னையில் இருந்து ஊருக்கு வருகிறார்கள். அப்போது திரிஷாவை பார்த்தவுடன் சூரி காதல் வயப்படுகிறார். சூரியின் காதலுக்காக திரிஷாவின் திருமணத்தை நிறுத்த ஜெயம் ரவி முயற்சி செய்கிறார். இந்நிலையில் திரிஷாவுக்கும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஜான் விஜய்க்கும் சென்னையில் திருமணம் நடக்க இருக்கிறது. அப்போது போலி என்கவுண்டர் செய்ததற்காக ஜான் விஜய்யை போலீஸ் கைது செய்கிறது.

குடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காகவும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் ஜெயம் ரவிக்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. இதனால் ஜெயம் ரவியின் காதலியான அஞ்சலி கோபமடைகிறார்.

அஞ்சலியின் காதலனான ஜெயம் ரவியும், மாடர்ன் பெண்ணான திரிஷாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? அஞ்சலியின் கோபம் என்ன ஆனது? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

சிட்டி பையனாக நடித்து வந்த ஜெயம் ரவி, இப்படத்தில் கிராமத்து இளைஞனாகவும், முழுக்க காமெடி நாயகனாகவும் நடிக்க முயற்சித்திருக்கிறார். இது அவருக்கு ஓரளவு கை கொடுத்திருக்கிறது. காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இவர் கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். திரிஷா கோபம், வெறுப்பு, அடக்கம், இயலாமை, ஆதங்கம் என அத்தனை முகபாவங்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெறும் பாடல்களுக்கு மட்டுமே வராமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வந்து ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறார் பூர்ணா.

சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் விவேக் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரண்டு விவேக்காக வந்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். போலீசாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், பிரபு, ரேகா, ராதாரவி, ஜான் விஜய் ஆகியோர் அவர்களுக்கு உண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் கதைகளில் பயணித்து வந்த சுராஜ், தற்போது நகைச்சுவையை மையமாக எடுத்து பயணித்திருக்கிறார். இதில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கையாண்டு, அதற்கான தீர்வை தித்திக்கும் மருந்தாக கொடுத்திருக்கிறார்.

தமனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணியையும் சிறப்பாக செய்திருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து இயற்கையை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘சகலகலா வல்லவன்’ வல்லவன்.