ரோமியோ ஜூலியட் – திரை விமர்சனம்

Romeo Juliet Rating : [usr=3.0 size=20]

எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக நினைக்கும் ஒரு இளைஞன், அதேபோல் எந்தவொரு பாசிட்டிவான விஷயத்தையும் நெகட்டிவாகவே யோசனை செய்யும் ஒரு இளம்பெண். ரெண்டு பேருக்கும் காதல் வருகிறது. இந்த காதல் கடைசிவரை நிலைத்து நின்று கைகூடியதா? இல்லையா? என்பதுதான் ரோமியோ ஜூலியட் படத்தின் கதை.

ஒரு பெரிய ஜிம்மில் கோச்சராக இருக்கிறார் ஜெயம் ரவி. இவர் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் கோச்சராக இருப்பதால், அனைவரும் இவரிடம் சகஜமாக பழகுகின்றனர்.

ஒருமுறை ஆர்யாவுக்கு டிரெயினிங் கொடுப்பதற்காக விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் ஜெயம் ரவியை பார்க்கும் ஏர் ஹோஸ்டஸான ஹன்சிகா அவர் பெரிய பணக்காரர் என்று புரிந்து கொள்கிறார்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட ஹன்சிகா, பெரிய பணக்காரரை காதலித்து ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அதனால் பணக்காரரான ஜெயம் ரவியை காதலித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்.

அவரிடம் காதல் சொல்ல ஒவ்வொரு முறை இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. ஒருகட்டத்தில் ஜெயம் ரவியே ஹன்சிகாவை நேரில் பார்த்து அவளது அழகில் மயங்கி, காதலில் விழுகிறார். அதன்பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

ஒருநாள் தங்களது காதலை, ஜெயம் ரவியின் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்று திருமணம் செய்துகொள்ள காதலர்கள் இருவரும் முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜெயம் ரவி, பெரிய பணக்காரன் இல்லை, சாதாரண ஒரு ஜிம் கோச்தான் என்பது ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது.

அவனை திருமணம் செய்துகொண்டால் தனது கனவு நிறைவேறாது என்பதால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், அவளது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயம் ரவி, அவளையே பின்தொடர்கிறார்.

ஆனால், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பணம்தான் தேவை. அன்பு முக்கியமில்லை என்று ஜெயம் ரவியை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டு செல்கிறாள் ஹன்சிகா.

இறுதியில், ஹன்சிகா தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக வாழ்ந்தாரா? ஹன்சிகாவை மறந்து ஜெயம் ரவி வேறொரு வாழ்க்கையை தேடிக்கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

ஜெயம் ரவி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார். இவரை பார்க்கும்போது யாரும் இவரை காதலிக்க முடியாது என்று கூறமுடியாது. அந்த அளவுக்கு இந்த படத்தில் இளமையாக இருக்கிறார்.

சற்று உடல் பெருத்திருந்தாலும் அவரை ரசிக்கமால் இருக்க முடியவில்லை. அதேபோல், நடிப்பையும் ரொம்ப ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

படத்தில் ஜெயம் ரவியைவிட ஹன்சிகாவுக்குத்தான் காட்சிகள் அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர். அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளும் கொடுத்திருக்கிறார். அனைத்தையும் கவனமாக கையாண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.

ஜெயம் ரவியை கழட்டி விடுவதற்காக இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், ஜெயம் ரவியை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள், அவருக்கு இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்துகொடுக்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் வெவ்வேறு விதமான முகபாவனையுடன் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.

பெரிய பணக்காரராக வரும் வம்சி கிருஷ்ணா ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தலாக நடித்திருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

இயக்குனர் லக்ஷமன் ஒரு நல்ல காதல் கதையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழகான காதல் கதையை திரையில் பார்த்த உணர்வு நமக்கு கிடைத்திருக்கிறது.

வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்து நிற்க பணம் தேவையில்லை. உண்மையான அன்புதான் தேவை என்பதை ஒவ்வொரு காதலருக்கும் புரிய வைத்திருக்கிறார்.

இந்த படத்துக்கு பிறகு ஏனோ தானோவென்று காதலிப்பவர்கள்கூட உண்மையான காதலர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார்.

அந்த நம்பிக்கை வீண்போகாது என்று சொல்லலாம். படம் முழுக்க காதலை மட்டுமே சொல்லாமல், கதையோடு ஒட்டிய காமெடியையும் புகுத்தியிருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு.

இமான் இசையில் பெரும் சர்ச்சையை சந்தித்த ‘டண்டணக்கா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. அதேபோல், ‘அரக்கி’ பாடலும் துள்ளி ஆட வைக்கிறது. ‘தூவானம்’ பாடல் நல்ல மெலோடி ரகம்.

வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாடல் நல்ல மெசேஜாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கலர் புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ அழகான காதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *