புறம்போக்கு – திரை விமர்சனம்

Movie Rating: [usr=3.0]

கம்யூனிஸ்ட் தீவிர இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆர்யா, காஷ்மீர் பகுதியில் மனித வெடிகுண்டாக செயல்பட முயற்சித்தார் என்பதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பில் போலீஸ் அதிகாரியான ஷாம் நியமிக்கப்படுகிறார்.

காலங்காலமாக தூக்கில் போடுபவர்தான் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், அந்த நபரை தேடி அலைகிறார் ஷாம். எப்போதாவது ஒருமுறைதான் தூக்குத்தண்டனை அறிவிக்கப்படும் என்பதால், அந்த நபரை தேடிப் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

கடைசியில், விஜய் சேதுபதியின் அப்பாதான் தூக்கு போடும் பணியை செய்து வந்தார் என்பதும், அவர் தற்போது இறந்துவிட்டபடியால் அவரது மகன் விஜய்சேதுபதி அந்த பணியை செய்து வருவதாகவும் ஷாமுக்கு தெரியவருகிறது.

ஆனால், விஜய் சேதுபதியோ, தன்னுடைய அப்பா இறந்த பிறகு ஒரு கைதிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற, அதன்பிறகு தான் ஏதோ கொலை செய்துவிட்டதுபோல் எண்ணி அந்த தொழிலை விட்டுவிட முடிவெடுக்கிறார்.

தான் செய்த தவறை எண்ணி, வருந்தி போதைக்கு அடிமையாகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதியை தேடிச் செல்லும் ஷாம், அவரிடம் ஒரு கொலை குற்றவாளிக்குத்தான் நீ தண்டனை வழங்கப் போகிறாய் என்று எடுத்துக்கூறி அவரை எப்படியாது கூட்டி வர நினைக்கிறார். ஆனால், விஜய் சேதுபதியோ அவரது அறிவுரையை கேட்க மறுக்கிறார்.

இதற்கிடையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கார்த்திகா தனது குழுவினருடன், ஆர்யாவை எப்படியாவது சிறையிலிருந்து காப்பாற்றிவிட துடிக்கிறார்.

ஆர்யாவை தூக்கில் போடுவதற்கு ஆள் இல்லாத விஷயம் கார்த்திகா குழுவுக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதியால் மட்டும் தான் ஆர்யாவை தூக்கில் போடமுடியும் என்ற விஷயமும் அக்குழுவின் காதுக்கு வருகிறது.

எனவே, விஜய் சேதுபதியை கொலை செய்துவிட்டால், ஆர்யாவின் தூக்குத் தண்டனையை தள்ளிப் போட முடியும். அதற்குள், ஆர்யாவை எப்படியாவது சிறையில் இருந்து தப்பிக்க வைத்துவிடலாம் என்று எண்ணி விஜய் சேதுபதியை தேடிச் செல்கிறார்கள் கார்த்திகா குழுவினர்.

ஆனால், விஜய் சேதுபதியோ இந்த வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அப்போது, கடவுளிடம் இவர் புலம்புவதை வைத்து, இவனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் விருப்பம் கிடையாது என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

உடனே, விஜய் சேதுபதியிடம் சென்று, ஆர்யா இந்த நாட்டுக்காக செய்த நன்மைகளை பற்றி விளக்கிக் கூறி, அவரை தங்கள் இயக்கத்தில் சேர்த்து, ஆர்யாவை வெளிக்கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.

இறுதியில், விஜய் சேதுபதி இவர்களுடன் இணைந்து ஆர்யாவை எப்படி சிறையில் இருந்து வெளிக்கொண்டு வந்தார்? என்பதே மீதிக்கதை.

இதுவரையிலான படங்களில் காதல், நகைச்சுவை, கலாட்டா செய்யும் இளைஞராக வலம்வந்த ஆர்யா, இந்த படத்தில் ஒரு பொறுப்புமிக்க மாபெரும் இயக்கத்தின் தலைவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ஒரு பொறுப்புமிக்க தலைவனாக நம் மனதில் அழுத்தமாக பதிந்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை இவரது நடிப்பு அபாரம்.

அதே போல் போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு இடத்தில்கூட இவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படம் முடிந்தபிறகும் இவரை நடிகராக நாம் பார்க்க முடியாது, ஒரு போலீஸ் அதிகாரியாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அவ்வளவு அழுத்தமான நடிப்பு இவருடையது.

ஒரு இயக்கத்தில் இருக்கும் துடிப்புமிக்க பெண்ணாக வரும் கார்த்திகா நாயரின் நடிப்பும் அபாரம். ‘கோ’ படத்திற்கு பிறகு இப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுக்கும் என நம்பலாம்.

ஒரு கைதியை தூக்குப் போடுபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தூக்கு போடும் இளைஞனாக வரும் விஜய் சேதுபதி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தூக்குப் போடுபவர்களும் மனிதர்கள்தான்.

ஒரு உயிரை கொல்லும்போது அவர்களது மனநிலை எப்படியெல்லாம் இருக்கும் என்பதை தனது அபார நடிப்பின்மூலம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தான் ஒரு அனுபவ இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை ஆராய்ந்து, அதற்கான நடிகர்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார்.

தனது கடமையை செய்ய நினைக்கும் போலீஸ், தூக்குத் தண்டனை கிடைத்து ஜெயிலில் இருந்தாலும், அங்கிருந்து தப்பித்து தன்னுடைய இயக்கத்தின் மூலம் இந்த நாட்டுக்கு எதையாவது செய்யத் துடிக்கும் இளைஞன், இதையெல்லாம்விட, ஒரு கைதியை தூக்கிலிடும் மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பவற்றை அழகாக பதிவு செய்திருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.

அதுபோல், ஒரு கைதிக்கு தூக்கு அறிவித்துவிட்டால், அதைத்தொடர்ந்து, சிறையில் எவ்விதமான நடைமுறைகள் இருக்கும், தூக்குப் போடுவதற்குண்டான வழிமுறைகள் என்னென்ன என்பதையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விறுவிறுப்பான படத்தில் கம்யூனிசத்தையும் கூடவே அழைத்து சென்ற ஜனநாதனை பெரிதும் பாராட்டலாம்.

வர்ஷன் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரம்மாண்ட சிறையில் இவரது கேமரா அழகாக ஆங்காங்கே புகுந்து படமாக்கியிருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘புறம்போக்கு’ பட்டா தரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *