பாகுபலியை ஆதரிக்க மாட்டேன்: நடிகர் சுரேஷ் ஆவேச டுவிட்

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘பாகுபலி’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், தமன்னா உள்ளிட்ட தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் வருகிற ஜுலை 10-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படம் உருவான விதம், படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்போது வெளிவரும் என அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதேபோல், பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனியர் நடிகர் ஒருவர் இந்த படத்திற்கு நான் ஆதரவளிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

1980-களில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சுரேஷ். இவர் தற்போது சில படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இவர்தான் ‘பாகுபலி’ படத்தை நான் ஆதரிக்கமாட்டேன் என்று கருத்து தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, பாகுபலி படத்தையும் ராஜமௌலியையும் நான் ஆதரிக்கமாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க திறமை மிக்கவர்கள் என்பதை அவர் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

அதாவது, ‘பாகுபலி’ படத்தில் குணச்சித்திர வேடங்களில் தமிழ் நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தமிழ் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளார் என்பதைத்தான் சுரேஷ் இப்படி கூறியிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், தமிழ் நடிகர்களுக்கு எதிராக சுரேஷ் கருத்து தெரிவிக்கிறார் என்றொரு சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது. இவருடைய இந்த கருத்துக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *