பச்சிளம் குழந்தையின் பார்வையை பறித்த கமெரா ஒளி ! பெற்றோர் அவதானம்

சீனாவில் கமெராவின் பிளாஷ் ஒளியால் பச்சிளம் குழந்தையின் பார்வை பறிபோன பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3 மாத குழந்தையை புகைப்படம் எடுக்கும் போது கமெராவின் அளவுக்கதிகமான பிளாஷ் ஒளியின் காரணமாக குழந்தையின் ஒரு கண்ணின் பார்வை பறிபோயுள்ளது என்று செய்தி வெளியானது.

இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அளவுக்கதிகமான ஒளி ஊடுருவி குழந்தையின் கருவிழியை சேதப்படுதியிருக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரின் வில்ஸ் கண் மருத்துவமனையில் பணிபுரியும் அலெக்ஸ் என்ற மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், கமெராவின் பிளாஷ் ஒளியால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை, அப்படியென்றால் இன்று பல குழந்தைகளின் பார்வை பறிபோயிருக்கும்.

இந்த செய்தி நம்பமுடியாததாக உள்ளது என்று கூறியுள்ளார். பொதுவாக குழந்தைகளை புகைப்படம் எடுக்கும்போது பிளாஷ் உபயோகிக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.