நயன்தாராவுடன் ரகசிய திருமணம் நடந்தது உண்மையா? டைரக்டர் விக்னேஷ் சிவன் பேட்டி

நயன்தாராவுடன் ரகசிய திருமணம் நடந்தது உண்மையா? டைரக்டர் விக்னேஷ் சிவன் பேட்டி
நயன்தாரா கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம், ‘நானும் ரவுடிதான்.’ இந்த படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்திருக்கிறார். இவர், சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தை இயக்கியவர். ‘நானும் ரவுடிதான்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து டைரக்டர் விக்னேஷ் சிவன், நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விக்னேஷ் சிவன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘நானும் ரவுடிதான்’ படம் திரைக்கு வந்ததை தொடர்ந்து நீங்கள் கோவில் கோவிலாக சென்று வருவதாக பேசப்படுகிறதே…என்ன வேண்டுதல்?

பதில்:- படம் நல்லவிதமாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடினால், சில கோவில்களுக்கு வந்து வணங்கி விடுவதாக வேண்டிக்கொண்டிருந்தேன். ‘நானும் ரவுடிதான்’ படத்தை திரையிட்ட எல்லா தியேட்டர்களில் இருந்தும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் என் வேண்டுதலை நிறைவேற்ற முதலில் திருப்பதி கோவிலுக்கு சென்றேன். பின்னர் சென்னையில் உள்ள அகத்தியர் கோவிலுக்கும், மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலுக்கும் போய் வணங்கினேன்.

கேள்வி:- இந்த படத்தின் வெற்றியை உங்கள் கதாநாயகி நயன்தாரா எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்?

பதில்:- அவங்களுக்கு சந்தோஷம்தான்…

கேள்வி:- உங்களுக்கும், நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறதே…அது உண்மையா?

பதில்:- பொதுவாக, திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஊர்-உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும். அதுபோல்தான் என் திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன் நடக்கும். எனக்கும், நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பேசப்படுவதில் உண்மை இல்லை.

கேள்வி:- நயன்தாராவுடன் உங்களுக்கு காதல் இருக்கிறதா, இல்லையா?

பதில்:- அது, தனிப்பட்ட விஷயம். கேள்வி:- இரண்டு பேரும் நெஞ்சோடு நெஞ்சு உரசியபடி நெருக்கமாக இருப்பது போல் ஒரு படம் வெளியானதே…அது உண்மையான படம்தானா, ‘செட்-அப்’ வேலையா? பதில்:- அந்த படத்தை உற்றுப் பாருங்கள், தெரியும்.

கேள்வி:- அடுத்த படத்தை முடிவு செய்து விட்டீர்களா?

பதில்:- ஒரு ‘ஐடியா’ இருக்கிறது. என்னுடைய அடுத்த படம் கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும். ‘நானும் ரவுடிதான்’ படத்தைப் பார்த்து விட்டு நடிகர் சித்தார்த், டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அடுத்ததாகவும் வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.’’

இவ்வாறு டைரக்டர் விக்னேஷ் சிவன் கூறினார்.