மாயா – திரை விமர்சனம்

Maya Movie Rating: [usr=3.0 size=20]

நடிகர் : ஆரி

நடிகை : நயன்தாரா
இயக்குனர் : அஸ்வின் சரவணன்
இசை : ரான் ஏதன் யோகன்
ஓளிப்பதிவு : சத்யன் சூர்யன்

கணவரைப் பிரிந்த நயன்தாரா, கைக்குழந்தையுடன் தனது தோழி வீட்டில் வசித்து வருகிறார். சினிமாவில் நடிகையாக முயற்சியும் செய்து வருகிறார். இவரது தோழி ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய் படத்தை திரையரங்கில் தனிமையில் அமர்ந்து பார்த்தால் ரூ.5 லட்சம் கொடுப்பதாக அறிவிப்பு வருகிறது.

பணக்கஷ்டம் காரணமாக அந்த பேய் படத்தை தனியாக பார்க்க வருகிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு முன் அந்த படத்தை பார்க்க வந்த ஒரு வினியோகஸ்தர் அரங்கிலேயே மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இருப்பினும், நயன்தாரா அந்த படத்தை பார்க்கிறார்.

அந்த படத்தில் ஆரி ஒரு பத்திரிகையில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒருமுறை மாயா என்ற கதைக்கு ஓவியம் வரையும் பணி வருகிறது. அந்த கதையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் மாயவனம் காட்டில் 24 ஆண்டுகளுக்கு முன்பு மனநோயாளிகளை ஆராய்ச்சி என்ற பெயரில் கொடூரமாக கொன்று அங்கேயே புதைத்திருக்கிறார்கள்.

அவர்கள் செய்த ஆராய்ச்சியில் கைக்குழந்தையுடன் இருக்கும் மாயா என்ற பெண் பார்வையிழந்து, மாடியில் இருந்து குதித்து இறந்துவிடுகிறாள்.
அவளை புதைக்கும்போது, அவளது கையில் விலையுயர்ந்த வைர மோதிரத்தையும் சேர்த்து புதைத்து விடுகிறார்கள். இதை தேடிப்போகும் அனைவரும் மர்மமாக இறந்து போகிறார்கள்.

அதில், ஆரியும் நண்பரும் இறந்துபோகவே, அந்த காட்டுக்குள் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்க்க ஆரி செல்கிறார்.
ஆரி செல்லும்போது அந்த கதையில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நயன்தாராவும் திரையில் தோன்றுகிறார். இதை பார்த்ததும் நயன்தாரா அதிர்ச்சியடைகிறார்.

அந்த படத்துக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? ஆரி என்ன ஆனார்? என்பதை திகிலுடன் முடித்திருக்கிறார்கள்.

நயன்தாரா ரொம்பவும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க சோகம் வழிந்த முகத்துடனே வலம் வந்தாலும் இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. முன் பாதியைவிட இரண்டாம் பாதியில் இவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆரி மிகவும் இயல்பாக நடித்துள்ளார். ஆரியையும், நயன்தாராவையும் சுற்றியே பெரும்பாலான காட்சிகள் நகர்வதால், ரோபோ சங்கர், லட்சுமி பிரியா, ரேஷ்மிமேனன், கோபி ஆகியோர் வந்துபோவதே தெரியவில்லை. அதேசமயம், அவர்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஹாரர் படங்கள் என்றால், படத்தின் இடையிடையேதான் பயமுறுத்தும்படியான காட்சிகள் வைத்திருப்பார்கள். ஆனால், இப்படத்தின் டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து கடைசி வரை முழுக்க முழுக்க ரசிகர்களை பயமுறுத்தும் வகையிலேயே காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

பேய் படம் என்றால், ரத்தம் வழிந்த கோர முகம், கொடூரமாக கொல்வது என்று பார்த்து பார்த்து சலித்துப்போன ரசிகர்களுக்கு இப்படத்தில் புது அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். படம் முழுக்க இருட்டை வைத்தே மிரட்டி இருக்கிறார்கள். இயக்குனர் கதை சொன்ன விதம் குழப்பியிருந்தாலும், படம் ரசிக்கும்படி இருக்கிறது.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு. ஆரி வரும் காட்சிகளுக்கு ஒரு டோன், நயன்தாரா வரும் காட்சிகளுக்கு ஒரு டோன் என கொடுத்து அசர வைத்திருக்கிறார். ரான் ஏதன் யோகன் இசையும் மிரட்டும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘மாயா’ மிரட்டுகிறாள்.