கமலின் புது படத்தை இயக்கும் மலையாள டைரக்டர்

கமலின் புது படத்தை இயக்கும் மலையாள டைரக்டர்

‘தூங்காவனம்’ படம் தமிழ், தெலுங்கில் தயாராகி இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு 60 நாட்களுக்குள் முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தை முடித்த கையோடு அடுத்த படத்துக்கு கமல் தயாராகி விட்டார். தூங்காவனம் படத்தில் குறுந்தாடியுடன் இருந்த கமல் புதிய படத்துக்காக கெட்டப்பை மாற்றி இருக்கிறார். தற்போது முரட்டு மீசையுடன் காட்சி அளிக்கிறார். கமலின் புதிய படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயார் ஆகிறது.

இந்த படத்தை பிரபல மலையாள பட இயக்குனர் ராஜீவ்குமார் இயக்குகிறார். 1989–ல் இவர் இயக்கத்தில் கமல் நடித்த ‘சாணக்கியன்’ மலையாளப் படம் தமிழிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார்.

கமலுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பதும், தொழில் நுட்ப பணியாளர்கள் பற்றியும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழ்– மலையாளத்தில் தயாராகும் கமலின் புதிய படத்தின் கதை மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

இந்த படத்தையும் குறைந்த நாட்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.