மேட் மேக்ஸ் ப்யூரி ரோடு – திரை விமர்சனம்

Movie: [usr=3.5 size=20]

பாலைவனத்தில் உள்ள மக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்து வருகிறார் இம்மார்டன் ஜோ. இந்த ஊரில் இருப்பவர்கள் எரிவாயு, தண்ணீர் மற்றும் ரத்தத்திற்காக போராடி வருகிறார்கள்.

உயிர் வாழ்வதற்கு ரத்தம் தேவைப்படுவதால் அந்த பாலைவனத்திற்கு வருபவர்களை அடிமையாக்கி அவர்களிடம் இருந்து இரத்ததை அபகரிக்கிறார்கள்.

இந்த நிலையில் அந்த இடத்திற்கு வரும் நாயகன் மேக்ஸ் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். ஒரு பக்கம் இந்த ஊரில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நாயகி ப்யூரியோசாவை, ஆயுத கிடங்கில் இருக்கும் ஆயுதங்களை எடுக்க ஜோ அனுப்புகிறார். அப்போது தந்திரமாக இம்மார்டின் ஜோவின் ஐந்து மனைவிகளை கடத்திக் கொண்டு செல்கிறார்.

இதையறியும் இம்மார்டின் ஜோ, ப்யூரியோசாவை பிடிக்க தனது மொத்த படையையும் களத்தில் இறக்குகிறார். ப்யூரியோசா, ஜோவின் ஐந்து மனைவிகளை பசுமை வாய்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும் நோக்கில் கடத்துகிறார். இதற்கு நாயகன் மேக்சும் உதவி செய்கிறார். ஆனால் இதை தடுக்கும் முயற்சியில் ஜோ தீவிரமாக ஈடுபடுகிறார்.

இறுதியில் ப்யூரியோசாவை ஜோ தடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் மேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாம் ஹார்டி வில்லன்களிடம் சிக்கும் காட்சிகளிலும், நாயகிக்காக உதவும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வில்லன்களிடம் தப்பிப் பிழைக்க, ப்யூரியோசாவின் உதவி தேவை என்பதால் மேக்ஸ் அவர்களுடன் இணைந்து கொள்கிறான். மனிதனின் உயிர் வாழும் ஆசைக்கு ஒரு உதாரணமான மேக்சின் கதாப்பாத்திரத்தைக் எடுத்துக் கொள்ளலாம்.

ப்யூரியோசாக வரும் சார்லீஸ் தெரான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். இப்படம் ஒரு ஹீரோயின் படம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தையே இவர்தான் சுமந்து செல்கிறார். இவருடன் ஐந்து பெண்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் வரும் வினோதமான வண்டிகள் மற்றும் கார் சேஷிங் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக நாயகி ஓட்டும் வாகனமான 18 சக்கரங்கள் கொண்ட வார் ரிக், படத்தில் ஒரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது.

படத்தில் நக்ஸ் எனும் மிகவும் சுவாரசியமான ‘வார் பாய்’ கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. நிக்கோலஸ் ஹால்ட் என்பவர் இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தன் உயிரை மாய்த்து ப்யூரியோசாவைத் தடுக்க நினைப்பது, வாகனத்தில் தடுமாறி விழுந்து ஜோவிடம் திட்டு வாங்குவது என ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

பாலைவனத்திலேயே முழு படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜார்ஜ் மில்லர். இப்படத்தில் நீர் ஆதாரத்தை யார் கையகப்படுத்துகின்றனரோ, அவர்கள்தான் எதிர்காலத்தில் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முடியுமெனத் தெளிவாகச் சித்தரிக்கிறார்.

மொத்தத்தில் ‘மேட் மேக்ஸ் ப்யூரி ரோடு’ சுவாரஸ்ய பாலைவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *