காதல் இலவசம் – திரை விமர்சனம்

மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு படித்து வருகிறார் நாயகி ஜஸ்மிதா. அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார் நாயகன் கணேஷ். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த நாயகன் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

இவருடைய நண்பர்கள் அனைவரும் குடிப்பழக்கம், சிகரெட் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகியிருந்தாலும் இவர் மட்டும் ஒழுக்கமானவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கல்லூரியில் படித்து வரும் நாயகியை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் நாயகன். அவளிடம் தனது காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் அரசியல்வாதியின் மகன் நாயகியின் புகைப்படத்தை வைத்து அதை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி முழுவதும் அந்த போட்டோவை பரப்பி விடுகிறார். இது நாயகனுக்கு தெரிய வரவே, அரசியல்வாதியின் மகனை அடித்து துவம்சம் செய்கிறார்.

இந்த சம்பவம் நாயகிக்கும் தெரிய வருகிறது. தன்மீதுள்ள காதலால்தான் கணேஷ் அரசியல்வாதியின் மகனை அடித்து உதைத்தான் என்பதை அறிகிறாள். ஆனால், காதல் மீது எந்த ஆர்வமும் இல்லாத நாயகி, அவனது காதலை நிராகரிக்கிறாள்.

இருப்பினும், இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். ஒருநேரத்தில் இவர்களது நட்பு காதலாக மாறி, இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கணேஷ் தன்னை மனப்பூர்வமாக காதலிக்கிறான் என்பது ஜஸ்மிதாவுக்கு மனதிருப்தி இருந்தாலும், தான் செய்யும் விபச்சார தொழிலால் அவனுக்கு துரோகம் செய்வதாக மறுபுறம் நினைக்கிறாள்.

ஒரு ஆணுக்கு பெண் சுகம் கிடைக்கும் வரைதான் அவளுடன் சுற்றுவான். அது கிடைத்துவிட்டால் அதன்பிறகு அந்த பெண் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் என்று ஜஸ்மிதாவின் அம்மா இவளது மனதை மாற்றுகிறாள். அதையும் கணேஷ் விஷயத்தில் சோதனை செய்து பார்க்கிறாள் ஜஸ்மிதா. அதிலும் கணேஷ் நேர்மையானவனாகவே இருக்கிறான்.

இறுதியில், தான் செய்யும் விபச்சாரத் தொழிலை கணேஷிடம் நாயகி கூறினாளா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கணேஷுக்கு அழகான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை ஏற்று சிறப்பா நடிக்க முயற்சித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். காதல் காட்சிகளில் நாயகியுடன் நெருங்கி நடிக்க ரொம்பவும் தயக்கம் காட்டியிருக்கிறார்.

நாயகி ஜஸ்மிதாவுக்கு கல்லூரி மாணவி, விபச்சாரி என இரு விதமான கதாபாத்திரம். இதில் விபச்சாரி வேடத்தில் ரொம்பவும் துணிச்சலாக நடித்திருக்கிறார்.

கல்லூரி மாணவி கதாபாத்திரம் சுமார்தான். நாயகன் நண்பனின் காதல் தோல்வி கதை தமிழ் சினிமாவுக்கு புதிது. மற்றபடி படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

தமிழ் சினிமாவுக்கு ஒரு அழுத்தமான கதையை கையில் எடுத்த இயக்குனர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன், அதை சரியான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யாமல் சொதப்பியிருக்கிறார்.

மேலும், காட்சியமைப்பிலும் கோர்வையில்லாமல் செல்வது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சில காட்சிகள் மட்டும் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

சரவணன், விஜயன் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவில்லை. எம்.சீலனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. வசந்தின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் கூட்டவில்லை.

மொத்தத்தில் ‘காதல் இலவசம்’ நெருடவில்லை நம் வசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *