கமரகட்டு – திரை விமர்சனம்

Movie: [usr=2.5 size=20]

யுவன், ஸ்ரீராம், ரக்‌ஷா, மனிஷா ஆகியோர் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். அக்கா தங்கையான ரக்‌ஷா, மனிஷாவை யுவனும், ஸ்ரீராமும் வெறித்தனமாக காதலித்து வருகிறார்கள். அதாவது தன் காதலிகளிடம் யாராவது பேசினால் அவர்களை அடித்துவிடும் அளவிற்கு காதலிக்கிறார்கள்.

யுவனும் ஸ்ரீராமும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். ஆனால் ரக்‌ஷா-மனிஷா சுமாராக படிக்க கூடியவர்கள். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு வருகிறது. இதற்காக ரக்‌ஷா, மனிஷா இருவரும் தன் காதலர்களிடம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், அதனால் தேர்வு முடியும் வரை நாம் யாரிடமும் பேச வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் யுவன், ஸ்ரீராமும் பின்னர் காதலிகளின் தொடர் வற்புறுத்தலின் பேரில் சம்மதிக்கிறார்கள். இந்த தேர்வில் பெண்கள் அதிக மார்க் எடுக்க வேண்டும் எண்ணி, யுவன், ஸ்ரீராம் இருவரும் ஒரு பாடத்தில் தேர்வு ஏழுதாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் தேர்வு முடிவில் பெயில் ஆகிறார்கள்.

ஆனால் இவர்களின் காதலிகளோ பாஸாகி விட்டு காலேஜுக்கு செல்கிறார்கள். காலேஜில் பணக்காரப் பசங்க இரண்டு பேர் ரக்‌ஷா, மனிஷாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ரக்‌ஷாவும் மனிஷாவும் பணக்காரப் பசங்க என்பதால் அவர்களை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். பணக்கார பசங்களிடம் அதிகம் பேசுவதால் ரக்‌ஷா, மனிஷா இருவரும் யுவன், ஸ்ரீராமிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார்கள்.

இதனால் கோபமடையும் யுவன், ஸ்ரீராம் இதுகுறித்து தங்கள் காதலிகளிடம் கேட்க, அதற்கு அவர்கள் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி இவர்களது காதலை வெறுக்கிறார்கள்.

இதனால் மனவேதனை அடையும் யுவன், ஸ்ரீராம் காதலிகளுடைய அம்மாவிடம் சென்று முறையிடுகிறார்கள். அதற்கு அவர்களின் அம்மா, உங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைக்கிறேன் என்று கூறி, வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மலை மேல் சென்று கொலை செய்து விடுகிறார்.

பிளஸ் 2-வில் பெயில் ஆனதால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார். இறந்த யுவன் மற்றும் ஸ்ரீராம் ஆவியாக மாறுகிறார்கள். அதன்பின் என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தில் யுவன், ஸ்ரீராம் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவரும் முந்தைய படங்களை விட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாகவும், காதலர்களாகவும், ஆவியாகவும் தங்களுடைய நடிப்பு திறனை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நாயகிகளான ரக்‌ஷா, மனிஷா இருவரும் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களது கொஞ்சும் காதலால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். கிரேன் மனோகர், வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பத்தில் காதல் படமாகவும் இடைவேளைக்கு பிறகு அமானுஷ்ய சக்தி கொண்ட திகில் படமாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன். தனியாக காமெடி டிராக் இல்லாமல் கதையை ஒட்டியே காமெடி வைத்திருப்பது சிறப்பு. நாம் கடவுளை நேரில் பார்க்கமுடியாது.

நம்மை சுற்றியிருப்பவர்கள்தான் நமக்கு கடவுள் உருவத்தில் உதவி செய்வார்கள். அதை உணரும் வகையில் இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையிலான பருவம் மிகவும் கடினமான பருவம். இந்த பருவத்தை சரியாக கையாளாமல் விட்டுவிட்டால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை படத்தில் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். இவர் ஒரு கலை இயக்குனர் மட்டுமல்ல, கதை இயக்குனர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

பைசல் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கமரகட்டு’ இனிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *