காக்கா முட்டை – திரை விமர்சனம்

Kaaka Muttai Movie Rating: [usr=3.5 size=20]

ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதை எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதையொட்டி செல்லும் கதைதான் காக்கா முட்டை.

படத்தில் இரண்டு சிறுவர்கள் சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களது தாயாக ஐஸ்வர்யா. ஜெயிலில் இருக்கும் தனது கணவரை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்று ஐஸ்வர்யா முயற்சிகள் எடுத்து வருகிறார்.

எனினும் படத்தின் பெரும்பாதி இரண்டு சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரை சுற்றியே பயணிக்கிறது.

எந்த இடத்திலும் சற்றும் தொய்வில்லாமல் இவர்களது நடிப்பு கதையை தூக்கி நிறுத்தியிருக்கிறது. படத்தில் எந்த இடத்திலும் சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமாக காட்சிகளில் பதிந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல், இவர்களுடைய நண்பர்களாக வரும் சிறுவர்களும் எதார்த்தம் மீறாமல் நடித்து கைதட்டல் பெறுகிறார்கள்.

முகம் நிறைய மேக்கப்பை பூசிக்கொண்டு நடிகைகளுக்கு மத்தியில், ஐஸ்வர்யா அழுக்கு முகத்தோடும், நல்ல நடிப்போடும் படம் முழுக்க கம்பீரமாய் வலம் வந்திருக்கிறார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதி.

இதுவரையிலான படங்களில் மிகவும் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த ஜோ மல்லூரி, இந்த படத்தில் சிறுவர்களோடு சேர்ந்து சிறுவனாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், சூது கவ்வும் ரமேஷ், யோகி பாபு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணிகண்டன் தனது முதல் படத்தில் மிக அழுத்தமான பதிவை தமிழ் சினிமாவுக்கு செய்திருக்கிறார் என்றால் மிகையாகாது. வெளிவருவதற்கு முன்பே பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் காக்கா முட்டை இவருக்கு சினிமாவில் ஒரு எனர்ஜியை கொடுத்திருக்கிறது என்று நம்பலாம்.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரொம்பவும் திறமையோடு வேலை வாங்கியிருக்கிறார் என்பது திரையில் பார்க்கும் காட்சிகள் மூலம் தெரிகிறது. இவருடைய பலமே படத்தின் திரைக்கதைதான். எந்த இடத்திலும் படம் போரடிக்கிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கச்சிதமாக இருக்கிறது. பின்னணி இசையும் அபாரம். மணிகண்டன் ஒளிப்பதிவில் சென்னையை அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

மொத்தத்தில் ‘காக்கா முட்டை’ அழகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *